ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்ந்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி திருச்சி, பெரம்பலூர், கரூர், சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு என தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து ஈரோடு தொல்காப்பியன் கொடுத்த புகாரின் பேரில் அறக்கடட்டளை நிர்வாகி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் குடுமியாண்மலை ரவிச்சந்திரன் கடந்த வாரம் புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி போலிசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதே நேரத்தில் தமிழ்நாடு ஆந்திரா என 47 இடங்களில் சோதனை செய்து 5 மோசடி கும்பல்களைச் சேர்ந்த 30 பேரை சிபிசிஐடி போலிசார் கைது செய்துள்ளனர். 

Advertisment

குடுமியாண்மலை ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டதையடுத்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் தமிழ்நாடு முழுவதும் இருந்து சி.பி.சி.ஐ.டி போலிசாரிடம் புகார் கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு ஜாமின் கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் குலாம்நபி ஆசாத் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (22.09.2025) மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சந்திரன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. சிபிசிஐடி புதுக்கோட்டை ஆய்வாளர் புவனேஸ்வரி ஆஜராகி இருந்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவிச்சந்திரன் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் மேல் வேறு யாரும் புகார் கொடுக்கவில்லை ஆகவே ரவிச்சந்திரனுக்கு ஜாமின வழங்க வேண்டும் என்று பேசினார். 

அப்போது அரசு வழக்கறிஞர் வெங்கடேசன், ரவிச்சந்திரன் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஒரு அறக்கட்டளையை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுமார் 4000 பேரை உறுப்பினராக சேர்த்து பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு முழுவதும் புகார்கள் உள்ளது. இதனால் தான் தமிழ்நாடு அரசு சிபிசிஐடி வசம் இந்த வழக்கை ஒப்படைத்து 43 இடங்களில் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் தான் ரவிச்சந்திரனை கைது செய்துள்ளனர். மேலும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என மத்திய அரசு நிறுவனங்களின் முத்திரைகளை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி ஏராளமான புகார்கள் சிபிசிஐடி க்கு வந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் ரவிச்சந்திரன் சிறையில் இருக்கும் போதே அவரது ஆட்கள் உறுப்பினர்கள் யாரும் புகார் கொடுக்க வேண்டாம் என்று தகவல்களை பரப்பி பணக்கட்டுகள் வைத்திருப்பது போல வீடியோக்களையும் வெளியிட்டு உள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் மோசடி நடந்துள்ளதால் சிபிசிஐடி போலிசார் விசாரனை செய்ய ரவிச்சந்திரனை ஜே.எம் கோர்டில் கஸ்டடி கேட்டு மனுத் தாக்ககல் செய்துள்ளனர். ஆகவே ரவிச்சந்திரனுக்கு ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நாளை செவ்வாய் கிழமை ஜே.எம் 2 நீதிமன்றத்தில் கஸ்டடி வழக்கு விசாரனைக்கு வருகிறது. மற்றொரு பக்கம் மோசடியில் ஈடுபட்டு சிறையில் உள்ள குடுமியாண்மலை ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக அவரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ள அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்கள் சிலர் பேரம் பேசும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment