அரசு மற்றும் தனியார் ஆகிய அனைத்து முறையான வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டத்தை கர்நாடகா அரசு அமல்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில அரசு, 18 முதல் 52 வயதுடைய அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதத்திற்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், பெண் மாதத்திற்கு ஒரு நாள் விடுப்பை மருத்துவ சான்றிதழ் இல்லாமல் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கிய முதல் மாநிலமாக இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் பெற்றுள்ளது.

Advertisment

இந்த கொள்கையால், சுமார் 4 லட்சம் முறைசார் பெண் பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருப்பது இதன் மிக முக்கிய அம்சமாகும். இந்தக் கொள்கையை கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சப்னா எஸ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழு வரைந்தது. இந்தக் குழு முதலில் வருடத்திற்கு ஆறு மாதவிடாய் விடுப்புகளை முன்மொழிந்தது. ஆனால் அரசாங்கம் உரிமையை இரட்டிப்பாக்கி 12 மாதங்களுக்கு பொருந்தும் வகையில் அமைத்துள்ளது.

உலகளவில் ஸ்பெயின், ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்பு ஏற்கனவே வழங்கப்படுகிறது. இந்தியாவில், பீகார் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் வரையறுக்கப்பட்ட பதிப்புகள் உள்ளன, அவை அரசாங்கப் பணிகளில் உள்ள பெண்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் வழங்குகின்றன. கேரளா பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐடிஐகளில் உள்ள ஊழியர்களுக்கும் மாதவிடாய் விடுப்பை வழங்குகிறது. கர்நாடகா தான், முதலில் அனைத்துத் துறைகளுக்கும் இந்த ஆணையை விரிவுபடுத்தியுள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால், பெண்களுக்கு இயல்பாக வரும் மாதவிடாய்யை சுற்றியுள்ள சில சமூக கட்டமைப்புகளை உடைப்பதற்காக ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

Advertisment