Advertisment

ராஜபாளையத்தை உலுக்கிய கோவில் சம்பவம்; ஒருவரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

4

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகே அமைந்துள்ளது தேவதானம் கிராமம். இந்தப் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நச்சாடை தவிர்த்தருளிய சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில், அதே கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான பேச்சிமுத்து, 50 வயதான சங்கர பாண்டியன் ஆகியோர் காவலாளியாகப் பணியாற்றி வந்தனர்.

Advertisment

இதில், மற்றொரு காவலாளியான மாடசாமி என்பவர் கடந்த 10-ஆம் தேதியன்று பகலில் வேலை பார்த்ததால் மற்ற இருவரும் இரவு நேரத்தில் காவல் பணியில் இருந்தனர். இந்நிலையில், காவலாளிகள் இருவரும் இரவுப் பணியில் இருந்தபோது திடீரென உள்ளே நுழைந்த மர்மக் கும்பல் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அந்த நேரத்தில், கோயிலுக்குள் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, அடுத்த நாள் காலை மாடசாமி கோயிலுக்கு வந்து பார்த்தபோது தான் இந்தக் கொடூர சம்பவம் அம்பலமானது.

Advertisment

கோயிலில் நடந்த இந்த இரட்டைக் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தினர். முன்னதாக, ஸ்பாட்டுக்கு படையெடுத்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சேத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோயிலில் இருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றிய டிஎஸ்பி பஸினா பீவி தலைமையிலான போலீசார், கோயிலில் திருட வந்தவர்களைக் காவலாளிகள் தடுத்ததால் இந்தக் கொலை நடந்ததா? அல்லது தனிப்பட்ட பகையை மனதில் வைத்து, திருட்டுச் சம்பவம் போல் சித்தரித்து இந்தக் கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதா? என்ற கோணங்களில் துப்புத் துலக்கி வந்தனர்.

இதன் நீட்சியாக, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் நாகராஜ் என்பவரைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். படுகாயமடைந்த நாகராஜை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் போலீஸ் கஸ்டடியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துவிடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

arrest police temple
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe