One arrested for selling counterfeit liquor with the help of TASMAC employees Photograph: (thiruvallur)
திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் இருந்து 96 மதுபாட்டில்கள் விற்பனைக்கு எடுத்துச் சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து விதிகளை மீறி டாஸ்மாக் ஊழியர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு 96 மதுபாட்டில்களை 20,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதனை சட்டத்திற்கு விரோதமாக கள்ள சந்தையில் விற்பனை செய்ய சதீஷ் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படை போலீசார் சதீஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருத்தணி மதுவிலக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு நீதிபதி முன்பு ஆஜர் செய்த போலீசார் சதீஷ் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்ய டாஸ்மாக் கடையில் இருந்து வழங்கிய டாஸ்மாக் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும். கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்பவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு இப்படி அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Follow Us