திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஊசித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்குமார் - கிருத்திகா தம்பதியினர். இவர்களது ஒன்றரை வயது மகன் பூமீஸ். நேற்று (24.09.2025) இந்திரா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 19 குழந்தைகளுக்கு ரமணி என்ற செவிலியர் தடுப்பூசி போட்டுள்ளார். இதில் விக்னேஷ் குமார் மகன் பூமீஸ்க்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன் பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஏற்கனவே பூமிசுக்கு 3 தடுப்பூசி போடப்பட்டு இருந்த நிலையில் நேற்று 4வது தடுப்பூசி போடப்பட்டது.
நேற்று இரவு வரை நல்ல நிலையில் விளையாடிக்கொண்டிருந்த பூமீஸ் உறங்கிய பின்னர் அதிகாலை 4 மணிக்கு தாய் கிருத்திகா எழுந்து பார்த்த போது குழந்தையின் கை கால்கள் அசைவு இல்லாமல் இருந்ததை அறிந்து பதறிப்போய் அழுதுள்ளார். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக குழந்தையை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கிராமிய போலீசார் விக்னேஷ் குமார் வீட்டிற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரும் தடுப்பூசி போட்ட செவிலியர் மீதும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தை இறந்ததற்கான உடற்கூறு பரிசோதனை அறிக்கை வரட்டும் அதன் பின் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனால் இரண்டு மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் கைவிட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மருத்துவர்களோ தடுப்பூசி போட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. அதே நாளில் அதே முகாமில் வேறு பல குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இறப்பு குறித்து ஆய்வு அறிக்கை வந்த பின்பே என்ன காரணம் என தெரியவரும் என கூறுகின்றனர்.