தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதைத் தொடர்ந்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். தற்போதைய தமிழக பாஜக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் கூட்டணிக் கட்சிகளை முறையாக கையாளவில்லை. இதற்கு முன்பு தமிழக பாஜக தலைவராக இருந்தவர் நன்றாக கையாண்டார். நாகேந்திரனுக்கு கையாள தெரியவில்லை என குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''திருநெல்வேலியில் நடந்த ஐந்து பாராளுமன்றங்களுடைய பூத் கமிட்டி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என தெரிவித்தார். காரணம் 25 முதல் 35 சதவீதம் வரை வாக்கு வைத்திருக்கும் பெரிய கட்சி. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 165 இடங்களில் போட்டியிட்டார்கள் இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வாக்குகள் பெற்றார்கள். சிறிய கட்சி பெரிய கட்சி என்பது முக்கியமல்ல கூட்டணி தான் முக்கியம். அதனுடைய அடிப்படையில் எல்லாரிடமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நான் காரணம் என டிடிவி.தினகரன் சொல்வது எந்த அடிப்படையில் என்பது எனக்கு தெரியவில்லை'' என்றார்.