தற்போதெல்லாம் சமூக அவலங்கள் செல்போன் கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. அப்படியொரு கொடுமை விருதுநகர் அருகிலுள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் நடந்துள்ளது. அங்கு சிறுவர்களை வேறு சில சிறுவர்கள் ஒன்று சேர்ந்து புகைபிடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி காலால் எட்டி உதைத்து தாக்கும் காட்சிதான் அது.

Advertisment

ஒண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள தோட்டப் பகுதியில் சில சிறுவர்கள் சேர்ந்து இரண்டு சிறுவர்களைப் புகைபிடிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். அந்தச் சிறுவர்கள் புகைக்க மறுத்து தலை வலிப்பதாக அழுகின்றனர். இதனைத் தொடர்ந்து, அச்சிறுவர்களைக் காலால் உதைத்து கட்டாயப்படுத்தி புகைக்கச் செய்கின்றனர். இந்தக் கொடுமையை அங்கிருந்த யாரோ ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நடந்தது என்னவென்றால், அடித்த சிறுவர்கள் புகை பிடித்ததை, அவர்களின் வீட்டில் இந்தச் சிறுவர்கள் கூறி காட்டி கொடுத்துள்ளனர்.  அதனால் ஆத்திரமடைந்து, இச்சிறுவர்களை அடித்துக் கட்டாயப்படுத்தி புகைபிடிக்க வைத்துள்ளனர். சிறுவர்கள் தாக்கப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட யாரும் காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.