நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (18-08-25) நாடாளுமன்றத்தில் தொடங்கியதிது. கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் இரு அவைகளிலும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதியில் கூடி பீகார் சிறப்பு தீவிர திருத்தச் சட்டத்திற்கு (SIR) எதிராகவும், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் கைகளில் பதாகைகளுடன் கடுமையாக முழக்கமிட்டனர். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “கோஷங்களை எழுப்புவதற்கு பதிலாக கேள்விகளைக் கேட்பதற்கு உங்கள் சக்தியை பயன்படுத்துங்கள். இது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். அரசாங்க சொத்துக்களை அழிப்பதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
நீங்கள் அரசாங்க சொத்துக்களை அழிக்க முயற்சித்தால், நான் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நாட்டு மக்கள் உங்களைப் பார்ப்பார்கள். பல சட்டமன்றங்களில் இதுபோன்ற சம்பவங்களுக்கு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் உங்களை மீண்டும் எச்சரிக்கிறேன். அரசாங்க சொத்துக்களை அழிக்க முயற்சிக்காதீர்கள். இது உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்” என்று கூறி சபையை ஒத்திவைத்தார்.
பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார். இருப்பினும், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.