புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள கீழாத்தூர் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிப்பவர் விசுவநாதன் (65). அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (55). இவர்களது மகன்களுக்கு திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். விசுவநாதனும் அவரது மனைவி சித்ராவும் தனியாக வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக விசுவநாதனின் டீ கடைக்கு வந்த ஒரு புதிய நபரான முதியவர், தான் சர்க்கரை நோய்க்கு நாட்டு மருந்து கொடுப்பேன் என்றும் நான் கொடுக்கும் மருந்தை ஒரு முறை குடித்தால் போதும் உடனே சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

இதை கேட்டு 10 வருடமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மனைவிக்கு மருந்து கொடுக்கச் சொன்ன போது நோயாளியை நேரில் பார்த்து தான் மருந்து கொடுக்கனும் அதிலும் ஆண்களுக்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்தால் போதும், பெண்களுக்கு 3 மணி நேரம் கொடுக்க வேண்டும் என்று முதியவர் கூறியுள்ளார். இதனால் கடையை விட்டு செல்ல முடியாத விசுவநாதன், தன் பக்கத்துவீட்டு மூதாட்டியுடன் முதியவரை தன் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். வீட்டை அடையாளம் காட்டிய மூதாட்டி சென்றுவிட்ட பிறகு, விசுவநாதன் மனைவி சித்திராவை உட்கார வைத்து தண்ணீரில் ஏதோ கலந்து கொடுத்திருக்கிறார். தன் நோய் குணமானால் சரி என்று முதியவர் கொடுத்த திரவத்தை குடித்துள்ளார். மாலை 6 மணிக்கு விசுவநாதன் வீட்டிற்கு சென்று பார்த்த போது தன் மனைவி சித்ரா மயங்கிய நிலையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

Advertisment

அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. உடனே வடகாடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த விசுவநாதன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுயநினைவில்லாத சித்ராவை ஆலங்குடி அரசு மருந்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். மேலும் நகை திருட தனிமையில் இருக்கும் பெண்களை குறிவைத்து மயக்க மருந்து கொடுத்து திருடும் முதியவர் போன்றவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

இதே போல கடந்த 2023 டிசம்பர் முதல் வாரத்தில் அன்னவாசல் பகுதியில் செய்வினை எடுப்பதாக கூறி ஒரு முதியவர், இதே போல நகைகளை திருடிச் சென்றார். அடுத்த ஒரு வாரத்தில் அதாவது டிசம்பர் 16 ந் தேதி கீரமங்கலம் ககாவல் சரகம் மேற்பனைக்காடு மையம் மகாலிங்கம் என்பவரின் வீட்டில் செய்வினை இருப்பதாக கூறி அதனை எடுக்க வேண்டும் என்றால் பூஜை செய்ய வேண்டும் என்று வீட்டில் இருந்த 7 சேலைகளை வாங்கி அடுக்கி வைத்து அதற்குள் 3 பவுன் தங்க நகைகளை வைக்கச் சொல்லி பூஜை செய்து தண்ணீரில் விபூதி போட தண்ணீர் சிவப்பாக மாறியதால் செய்வினை வேகமாக உள்ளது. எனவே உடனே கீரமங்கலம் சிவன் கோயிலில் பரிகாரம் செய்ய வேண்டும், நான் முன்னால் போறேன் நீங்க பின்னால் வாங்க என்று கூறி முதியவர் சென்று தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்து சேலையை பிரித்து பார்த்த போது தங்க நகைகளை காணவில்லை மாறாக கல் இருந்தது. அதன் பிறகே முதியவரால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர். போலீசார் விசாரனையில், அந்த முதியவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தற்போதும் கீழாத்தூர் சம்பவத்தில் அதே முதியவர் நாட்டு வைத்தியர் போல நடித்து பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றிருப்பாரோ என்றும் விசாரனை செய்து வருகின்றனர். 

Advertisment