செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று 'தலைமகன் நிமிர்த்த தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம்' என்ற முழக்கத்தை தமிழக முதல்வர் முன்வைத்திருந்தார். தொடர்ந்து தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் திமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் மூத்த நிர்வாகியும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக திருச்சி சிவா பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென மேடைக்கு தாமதமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வந்திருந்தார்.
அவர் வந்தவுடன் கூட்டம் அவர் பக்கம் திரும்பி ஆரவாரம் செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த திருச்சி சிவா, ''யோ இங்க பாருங்க... யார் வந்தால் என்ன?. அவர் பாட்டுக்கு வருகிறார் நீங்கள் ஏன் திரும்புகிறீர்கள். நான் அடி வயிற்றிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
அப்பொழுது செந்தில் பாலாஜி சால்வையை திருச்சி சிவாவிற்கு அணிவித்தார். பின்னர் திருச்சி சிவா, ''இந்த நாட்டில் இனித் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே'' என பேசத் தொடங்கினார். இந்த சம்பவத்தால் மேடையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.