தூத்துக்குடி ஆர்.டி.ஓ. (RTO) அலுவலகத்தில் வாகனப் பதிவு, எப்.சி., ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும் என விலைப்பட்டியல் வைத்து, சாதாரண பொதுமக்கள் முதல் டிரான்ஸ்போர்ட் அதிபர்கள் வரை எல்லோரிடமும் கறாராக கரன்சி நோட்டுகள் வசூலிக்கப்படுவதாக மாவட்ட விஜிலன்ஸ் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றிருக்கின்றன. மேலும், முறையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அத்துடன் ஆர்.டி.ஓ. அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏஜெண்டுகள் இணைந்து ரகசிய வாட்ஸ்அப் குழு மூலம் செயல்பட்டு, ஏஜெண்டுகள் பரிந்துரைத்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், அலுவலகம் ஏஜெண்டுகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் அணிவகுத்தன.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட விஜிலன்ஸ் டி.எஸ்.பி. பீட்டர் பால் துரை தலைமையிலான குழு ஒன்று 11-ஆம் தேதி பிற்பகல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியது. சோதனையின்போது, அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. ஏஜெண்டுகள், அவர்களின் வாகனங்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரி அறைகளில் விஜிலன்ஸ் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்களின் கார்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குள் இருந்து, பல்வேறு ஆவணங்களுக்கு இடையே ஆங்காங்கே ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத 1,52,100( 1 லட்சத்து 52 ஆயிரத்து 100) ரூபாய் பணத்தை விஜிலன்ஸ் போலீசார் கைப்பற்றினர்.
இந்தப் பணம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசன் மற்றும் ஊழியர்கள், ஏஜெண்டுகளிடம் விஜிலன்ஸ் போலீசார் இரவு வரை விசாரணை நடத்தினர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், கணக்கில் வராத 1,52,100 ரூபாய் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி