தமிழ்நாட்டின் மயில்கள் சரணாலயம் என்று கூறப்படும் ஊர் விராலிமலை. காடுகள் அழிப்பு, வறட்சியால் விவசாயம் பொய்த்துப் போனது, ஆக்கிரமிப்புகளால் மயில்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் ஊராக உள்ளது. இங்கு பழையபடி மயில்கள் வாழ சரணாலயம் அமைத்து வனப்பரப்பை பெருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது. மேலும் இங்கு மலை மீது அமைந்துள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்றது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் மலை மேல் வாகனங்கள் செல்லவும் வழித்தடம் அமைக்கப்பட்டு லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஆனால் சமீப காலமாக கோயில் அமைந்துள்ள மலையைச் சுற்றி உள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு வருகிறது. இதனால் கோயிலுக்கு மக்கள் வந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்துள்ள நிலையில் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அலட்சியம் காட்டியதன் விளைவு தான் இன்று ஒரு சமூக ஆர்வலர்  உயிரைப் பறித்தது. இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம கொள்ளையர்களிடம் இருந்து கனிமவளங்களை காப்பாற்றுகள் என்று புகார் மேல் புகார் கொடுத்த சமூக ஆர்வலர் திருமயம் ஜபகர்அலி கொல்லப்பட்டதற்கும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமானது போல தான் இன்று விராலிமலையிலும் நடந்துள்ளது என்கிறார்கள் அரசு சொத்துகளை பாதுகாக்க போராடும் சமூக ஆர்வலர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி கொடும்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருத்தக்கண்ணு மகன் ஆறுமுகம் (எ) ஆரப்பன் (43) இவருக்கு திருமணமாகி கல்பனா தேவி என்ற மனைவியும் ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர். முரு பக்தரான இவர் விராலிமலை முருகன் கோவில் மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு கொடுத்த பட்டாக்களை ரத்து செய்யக் கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் பயனில்லாததால் கடந்த ஏப்ரல் மாதம் அதே கோரிக்கையை வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை.

இந்தநிலையில் தான் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அதிகாலையே விராலிமலை முருகன் கோவிலுக்கு சென்றவர் அங்கு 70 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மீது ஏறி ஒரு தேசிய கொடியை விளக்கு கம்பத்தில் பறக்கவிட்டவர் மற்றொரு தேசியக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு நின்றுள்ளார். இதனைப் பார்த்த பக்தர்கள் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு, அறநிலையத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் பலமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் இறங்க மறுத்துள்ளார்.

Advertisment
a4879
Officials' negligence! Social activists are losing their lives one after another! - Muruga devotee who was struggling by climbing the Rajagopuram falls and lose their live Photograph: (pudukottai)

மற்றொரு பக்கம் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்க ராஜகோபுரத்தில் ஏறியதைப் பார்த்த ஆறுமுகம் யாராவது மேலே ஏறினால் கீழே குதிப்பேன் என்று சொன்னவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தானாக கீழே இறங்குவதாக கூறி பொம்மைகளை பிடித்துக் கொண்டு கீழே இறங்கும் போது தடுமாற்றம் ஏற்பட்டு அவர் பிடித்திருந்த யாளி சிற்பம் உடைந்ததால் அங்கிருந்து கீழே மணிமண்டபத்தில் விழுந்த ஆறுமுகம் பலத்த காயமடைந்த நிலையில் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடனே அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து ஆறுமுகத்துடன் சென்றவரிடம் விசாரனை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும் போது, இயற்கை வளங்களையும், அரசு சொத்துகளையும் அதிகாரிகள் பாதுகாக்க தவறியதால் அதனைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். இப்படி அரசு சொத்துகளை பாதுகாக்கப் போராடினால் உயிர் போவது தான் பரிசாக கிடைக்கிறது என்பது தான் வேதனையாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில மாதங்களிலேயே அடுத்தடுத்த சில சமூக ஆர்வலர்களை இழந்துவிட்டோம்.

Advertisment

தற்போது போராட்டக் களத்திலேயே உயிரிழந்த ஆறுமுகம் ஏற்கனவே கோவில் மலை அடிவார ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் டவரில் ஏறிப் போராடினார். போன வாரம் கோயிலுக்குள் நெகிழி பயன்பாடு அதிகமாக உள்ளது அதை கேட்டால் நெகிழி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடச்சொன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் தான் சுதந்திர தினத்தன்று அதிகாரிகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது ஆக்கிரமிப்பை அகற்றச் செய்ய மலை மீதுள்ள ராஜகோபுரத்தில் ஏறியுள்ளார். இந்த ராஜகோபுரம் 5 நிலை கொண்ட 70 அடி உயரம் உள்ளது. 3 நிலைவரை உள்பக்கம் சிறிய படிகள் உள்ளது. அதற்கு மேலே சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆறுமுகம் நீண்ட நேரம் கோபுரம் உச்சியில் நின்றதால் உடல் தளர்ச்சியடைந்த நிலையில் சங்கிலியை பிடிக்காமல் பொம்மைகளை மட்டுமே பிடித்து இறங்கியதால் வழுக்கி விட்டதால் சிலையிலும் உடைப்பு ஏற்பட்டு அதிகாரிகள் கண்முன்னே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அரசு சொத்தை பாதுகாக்க போராடி உயிரிழந்த ஆறுமுகம் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் பலியான பிறகாவது இனியும் அடுத்த உயிர் போவதற்கள் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் துரிதமாக செயல்பட்டு ஆறுமுகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.