குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இந்த தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜக்தீப் தன்கர் இது தொடர்பான கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் மருத்துவ காரணங்களுக்காகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், பா.ஜ.க தலைவர்கள் - ஜக்தீப் தன்கர் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

இதற்கிடையே ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முறைப்படி ஏற்று அந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தார். அதே சமயம் இந்திய அரசியலமைப்புச் சட்ட்டபிரிவு 63இன் படி குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருக்கும் போது இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ அந்த காலியிடத்திற்கான தேர்தல் 60 நாட்களுக்குள் நடைபெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. 

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடியத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆகும். அதே சமயம்  குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்  பட்சத்தில் வாக்கு எண்ணிக்கையும் அன்றே (09.09.2025) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த இரு அவைகளின் எம்.பி.க்கள் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வாக்களிக்க உள்ளனர். குடியரசு துணைத் தலைவரை நியமிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது ஆளுங்கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகவும், எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி சார்பாகவும் தனித்தனி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.