கோவில்பட்டி அருகே உள்ள இ. ராமநாதபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் வெஜிடேபிள் ஆயில் ப்ராசசிங் யூனிட் என்ற பெயரில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளது. ஆனால், முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் அதிக அளவு ரசாயனங்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரித்து, அதை இயற்கை உரம் என மோசடியாக அச்சிட்டு விவசாயிகளை ஏமாற்றி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருவதாக அரசுக்கு புகார் சென்றுள்ளது.

Advertisment

புகாரின் பேரில் தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநர்கள் கண்ணன், ஆதி நாதன், நாகராஜன், கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குநர் மணிகண்டன், வேளாண்மை அலுவலர்கள் காயத்ரி, நரேஷ் பிரபு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி சாலையில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு குடோனில் மூன்று குழுக்களாக 12-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்கு 160 பேரல்களில் தியாமெத்சம் ரசாயனத் திரவம் மற்றும் புகையிலை குவியல் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 5 மணி நேரமாக இந்தச் சோதனை நடைபெற்ற நிலையில் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களில் பேக்கிங் செய்யப்பட்டிருந்த சில பூச்சிக்கொல்லி மருந்துகளையும், எண்ணெய் மாதிரியான திரவங்களையும் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அந்தக் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Advertisment

இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தக் குடோனில் 160 பேரல் தியாமெத்சம் ரசாயனத் திரவம் மற்றும் புகையிலை குவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகப்படும்படியான சில பூச்சிக்கொல்லி மருந்துகளையும், எண்ணெய் மாதிரியான திரவங்களையும் கைப்பற்றியுள்ளோம். இதை ஆய்வகத்துக்கு அனுப்பிப் பரிசோதித்து இயற்கை உரமா அல்லது ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்தா என்பதை உறுதி செய்து அதன் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்தக் குடோன் எந்தவித அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் செயல்பாட்டில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே முதல் கட்டமாகக் குடோனை மூடி சீல் வைத்துள்ளோம் என்றனர்.

இயற்கை உரம் என போலியாக விளம்பரம் செய்து ரசாயன உரம் விற்று 5 மாநிலங்களில் மோசடி என வெளியாகியுள்ள குற்றச்சாட்டும், மூன்று மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ள சம்பவமும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி