19 வயது இளம்பெண், காதலித்ததால் உயிருடன் எரித்து ஆணவக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதலனின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டாரா? என்று பல கேள்விகளுடன் ஒடிசாவையே பதறவைத்திருக்கிறது மருத்துவ மாணவியின் மர்ம மரணம்...!

ஒடிசா மாநிலம், பட்டாமுண்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஷிவானி (பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது), கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். ஷிவானியும், பிரமோத் பெஹெரா என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலுக்கு ஷிவானியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 5 அன்று, பட்டாமுண்டை பகுதியில் உள்ள தனது வீட்டின் மாடியில், வாசல் அருகே உள்ள படிக்கட்டில் ஷிவானி தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தீயில் கருகிய நிலையில் இருந்த ஷிவானியின் உடல், மாடியின் கம்பி கதவில் கட்டப்பட்டது போன்று தெரிந்திருக்கிறது. ஆனால், அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிய ஷிவானியின் தந்தை, தனது மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து பேசிய அவர், பிரமோத் பெஹெரா என்ற இளைஞர் தனது மகள் ஷிவானியை மன ரீதியாக துன்புறுத்தி வந்தார். மேலும், அவர்கள் இருவரும் காதலிக்கும்போது எடுத்தக்கொண்ட தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதனால் ஏற்பட்ட மன அழுத்ததின் காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டினார். ஆனால், அவர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரில், காதலன் அல்லது அவரது மிரட்டல் குறித்து எந்த தகவலை குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisment

உள்ளூர் ஊடகத்திடம் பேசிய பிரமோத் பெஹெராவின் தாயார், “எனது மகனும் ஷிவானியும் காதலித்து வந்தனர். ஆனால், அவரது தந்தைக்கு இது பிடிக்கவில்லை; கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனது மகன் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறுவது முற்றிலும் தவறு. அவன் அப்படி செய்யவே மாட்டான். ஷிவானி தற்கொலை செய்திருக்க மாட்டார்; அவரது குடும்பத்தினரே அவளை உயிருடன் எரித்து ஆணவக் கொலை செய்திருக்கலாம்,” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஷிவானியின் தந்தை, காதலனின் மிரட்டல் காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார். மறுபுறம், காதலனின் குடும்பத்தினர், அவரது தந்தையே ஷிவானியை ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம் சாட்டுகின்றனர். இப்படி, இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டுவது விசாரணையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இதனிடையே, சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது ஆணவக் கொலையா அல்லது காதலனின் அழுத்தத்தால் ஏற்பட்ட தற்கொலையா என்று பல கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய கேந்திரபாரா மாவட்ட எஸ்.பி. சித்தார்த் கட்டாரியா, “இந்த வழக்கு விசாரணை எனது தனிப்பட்ட மேற்பார்வையில் நடந்து கொண்டிருக்கிறது. மாணவி எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும். தற்போது அந்த அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். மாணவியின் வீட்டில் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து, அதில் கிடைக்கப்பட்ட தடயங்களை வைத்து விசாரித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார். அதே சமயம்,பெண்ணின் குடும்பத்தினர், பிரமோத் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகிறோம் என்றார்.

Advertisment

மாணவியின் உடல் மாடியில் உள்ள வாசல் கம்பி கதவில் கட்டப்பட்டிருந்தது போல் தெரிகிறது. ஒருவேளை அந்தப் பெண்ணே தற்கொலை செய்து கொண்டாலும், எப்படி தன்னைத் தானே கம்பி கதவில் கட்டிக்கொண்டு தற்கொலை செய்திருக்க முடியும்? அதனால், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.