டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கெடு விதித்திருந்தார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தால் புதிய கட்சி தொடங்க கூட தயங்க மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், கடந்த 2ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அமித் ஷாவை அவர் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 5ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை என்று பல்டி அடித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 10ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக இணைப்பு குறித்து எதாவது பேசப்படுமா என்று ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த கூட்டத்தில் அதிமுக இணைப்பு குறித்து எதுவும் பேசப்படவில்லை. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
அரசியலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் முடிவு குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினமான டிசம்பர் 24ஆம் தேதியன்று ஆலோசனை கூட்டத்தை நடத்தி ஓ.பன்னீர்செல்வம் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/ops-2025-12-13-11-39-01.jpg)