பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கெனவே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அணியும் இருந்தது. இதனையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. கூட்டணிக்குள் வந்ததற்கு பிறகு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைக்க பா.ஜ.க திட்டமிட்டு இருந்தது. ஆனால், கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் சேர்ப்பதில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறினார். வெளியேறிய இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை பாஜகவினர் மேற்கொண்டு வந்தனர். ஆனால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால் மீண்டும் கூட்டணியில் சேரத் தயார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், 10 நாட்களுக்குள் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். இது அதிமுக மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதன் எதிரொலியாக, செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனிடையே, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும், அந்த தகவலை எல்லாம் செங்கோட்டையன் மறுத்து வருகிறார். இதனிடையே, சசிகலா, டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து பேசியிருக்கின்றனர். சென்னையில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இருவரும் அருகருகே அமர்ந்து 10 நிமிடங்களுக்கு மேலாக பேசிக் கொண்டிருந்தனர்.