O panneerselvam supporter dharmar MP joining AIADMK and Key points of successive withdrawals
முன்னாள் முதல்வர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காததால், தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வருகினர். அதன்படி அதிமுக எம்.எல்.ஏவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், கடந்தாண்டு நவம்பரில் ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார். இதையடுத்து கடந்த 8ஆம் தேதி ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான சுப்புரத்தினம், ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
அவரை தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம், திடீரென திமுகவில் இணைந்தார். அவரோடு, அவருடைய மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிருப்தியை கொடுத்திருந்தது.
இந்த நிலையில், மற்றொரு ஓபிஎஸ் ஆதரவாளர் அவரிடம் இருந்து விலகிவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி தர்மர் என்பவர் இன்று (24-01-26) மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மர், கடந்த 2022ஆம் ஆண்டில் மாநிலங்களவை எம்.பியாக பொறுப்பேற்றார். ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக அதிமுக பிளவுப்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தர்மர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், தர்மர் போன்ற முக்கிய நபர்கள் அடுத்தடுத்து ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைவது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
Follow Us