பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கெனவே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அணியும் இருந்தது. இதனையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. கூட்டணிக்குள் வந்ததற்கு பிறகு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைக்க பா.ஜ.க திட்டமிட்டு இருந்தது. ஆனால், கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் சேர்ப்பதில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறினார். வெளியேறிய இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “அரசியலில் எதுவும் நடக்கலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான உண்டான அடிப்படை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார். 

Advertisment