O. Panneerselvam said No new party is going to be started
அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாளை இன்று (17-01-26) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வராக இருந்து பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் கழகத்திற்கு வந்த சோதனைகள் வேதனைகளை எல்லாம் தாங்கி இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமான உருவாக்கி வளர்த்தெடுத்தார்” என்று கூறினார்.
இதையடுத்து தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எங்களுடைய தேர்தல் நிலைப்பாடு? யாருடைய கூட்டணி என்பதை இன்னும் சில தினங்களில் நான் முறையாக அறிவிப்பேன். நான் எந்தவொரு புதிய கட்சியும் ஆரம்பிக்கப்போவதாக இல்லை. எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை உயிரோட்டம் உள்ள இயக்கமாக உருவாக்குவதற்கு கழகத்தினுடைய சட்டவிதியை உருவாக்கினார். அந்த சட்டவிதியின்படி எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவின் கழகத்தை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக வளர்த்தெடுத்தார்கள். இது தான் வரலாற்ய், அந்த சட்டவிதிக்கு இன்றைக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது. கழக சட்டவிதியை சில சில திருத்தங்கள் செய்வதற்கு வழிவகுந்திருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு விதியை ரத்து செய்யவோ, திருத்தம் செய்யவோ கூடாது என்று சட்டவிதியில் குறிப்பிட்டுள்ளனர்.
அது என்னவென்றால், அதிமுகவின் தலைமை பதவியை அடிமட்ட தொண்டர்கள் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும். இதுதான் கழகத்தினுடைய சட்டவிதி. ஆனால், அந்த சட்டவிதியை திருத்தம் செய்திருக்கிறார்கள். இதை எதிர்த்து தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இது உள்பட 6 வழக்குகளையும் சேர்த்து உயர்நீதிமன்றத்தின் சிவில் சூட்டில் மனுத்தாக்கல் செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றம் எங்களிடம் சொன்னது. அதன்படி இன்றைக்கு இந்த வழக்கு சிவில் சூட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் பிரிந்திருக்கின்ற சக்திகள் அனைவரும் இணைய வேண்டும் என்று நான் சொல்லி இருக்கிறேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவின் இந்த இயக்கத்தை எப்படி வழிநடத்தினார்களோ அதை போல் அனைவரும் இணைந்து நாமும் வழிநடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி எப்போது சட்டவிதிகளுக்கு மாறாக பொதுச் செயலாளராக பதவியேற்றாரோ அன்று முதல் இன்றுவரை நடந்த 11 தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை” என்று தெரிவித்தார்.
Follow Us