பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து காலக்கெடு விதித்து வருகிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்காமல் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தியை அவர் முழுமையாக மறுத்து தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு கூறினார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் கடந்த 21ஆம் தேதி திடீரென திமுகவில் இணைந்தார். அவரோடு, அவருடைய மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிருப்தியை கொடுத்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், செங்கல்பட்டு மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடக்க விழா இன்று (23-01-26) பிற்பகல் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கு பெறவுள்ளனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்குபெறவுள்ளனர். ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், இவ்விழாவில் பங்கேற்காததை அடுத்து அவர் அக்கூட்டணியில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசியலில் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து தை முடிவதற்குள் உரிய பதிலை தருகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், அடுத்த கட்ட நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இன்று சென்னைக்கு போகிறேன். இன்னும் 2 நாட்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் முடிந்த பின்பு உரிய பதிலை உங்களுக்கு அளிக்கப்படும். தை முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. தை முடிவதற்குள் உரிய பதிலை அளிக்கப்படும்” என்று தெரிவித்து காரில் புறப்பட்டுச் சென்றார். 

Advertisment