O. Panneerselvam responds to Vaiko's accusation
மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று (07.11.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அனுப்பி வைத்த குழுவில் இருந்த நண்பர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மதிமுக தலைமை கழகத்திற்கு வந்தனர். அப்போது அவர்களிடம், கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டேன். 12 சீட் தான் என்றார்கள்.
இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது, இதற்கு உடன்பட முடியாது. இதைவிட அதிகமான சீட்டுகளை கொடுக்க உங்கள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒப்புக்கொண்டால் கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன். நான் செல்போனை ஆன்லேயே வைத்திருக்கிறேன். மாலை 5 மணிக்கு எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னால் சொல்லிவிட்டால் அப்போதே கூட்டணியை உறுதிப்படுத்தலாம் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதில் முக்கியமாகச் சொன்னவர் ஓ.பி.எஸ். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் சென்று ‘வைகோ, நம் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. அவர் சொல்வதுபோல் நம்மால் சீட் கொடுக்க முடியாது. அதனால் கூட்டணியை முறித்துவிட்டார்’ என்று பொய்யைச் சொல்லிவிட்டார்.
ஆனால், 15 சட்டமன்றத் தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பது என்று ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார், எனவே நீங்கள் நேராகச் சென்று அவரை சந்தித்தால் இதை அவர் உறுதிப்படுத்துவார்கள் என மூத்த பத்திரிக்கையாளர் வைத்தியநாதனும், சோவும் என்னிடம் பேசுவதற்கு படாத பாடுபட்டிருக்கிறார்கள். இதை வைத்தியநாதன் மூலம் பின்னர் தெரிந்துகொண்டேன். நான் செல்போனை எல்லாம் ஆஃப் செய்துவிட்டு இருக்கும் இடமே தெரியக்கூடாது என்று வீட்டில் இருந்தேன். மாலைதான் தாயகத்திற்கு வந்தேன். ஓ.பி.எஸ். அழைப்பார் என்று செல்போனைக் கையிலேயே வைத்திருந்தேன். ஆனால் அவர் கூப்பிடவேயில்லை. ஏனென்றால் வைகோ எந்த காரணத்தினாலும் கூட்டணிக்கு வரமாட்டார் என ஓ.பி.எஸ் சொல்லிவிட்டார். அதன் பலனை இன்று ஓ.பி.எஸ். அனுபவித்துக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
வைகோவின் இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னிரிசெல்வம், “ஜெயலலிதாவுடன் 25 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அவர் என்ன சொல்ல சொல்கிறாரோ, என்ன பேச சொல்கிறாரோ அதை மட்டுமே நான் பேசி வந்திருக்கிறேன், செயல்பட்டு வந்திருக்கிறேன். வைகோ மீது நான் மிகுந்த மரியாதையும், அன்பும் பாசமும் பற்றும் வைத்திருக்கிறேன். இன்றைக்கும் வைத்திருக்கிறேன். அவர் என்ன பேசினாலும், நான் அவர் மீது அன்போடு தான் இருப்பேன், மரியாதையோடு தான் இருப்பேன்.
நான் சொல்லும் பதில், அவர் மனம் புண்படும்படியாக ஒரு சூழ்நிலை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் நான் அந்த பிரச்சனைக்குள் போக விரும்பவில்லை. அரசியல் நாகரிகம் கருதி எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஏனென்றால் 2011இல் நடந்த அந்த பேச்சு, இன்று கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆகிறது. அதை இப்போது பேச வேண்டிய நிலை ஏன்? அவருக்கு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அது பிரச்சனையாக அல்ல, நான் உண்மையை தான் சொல்வேன். நான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பினால் நான் அதை சொல்வேன்” என்று பேசினார்.
அதனை தொடர்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை பா.ஜ.க தான் மேற்கொள்ள சொன்னதாக செங்கோட்டையன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “செங்கோட்டையன் நல்ல எண்ணத்தில் தான் செயல்பட்டார். ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்றவே நாங்கள் பாடுபட்டோம். கழகம் இணைய வேண்டும் என்று தான் நானும், செங்கோட்டையனும் நினைக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, தொண்டர்களும் இன்றைக்கு கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.கவில் உள்ள மேல்பட்ட தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தனிப்பட்ட ஒருவருடைய வெறுப்பு விருப்பத்தால் இயக்கம் ஒன்றுபடுவதற்கு தடையாக இருக்கிறது. பா.ஜ.கவில் உள்ள மூத்த தலைவர்காள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று அவர்களும் விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
Follow Us