பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து காலக்கெடு விதித்து வந்தார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காததால், தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார்.

Advertisment

இந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தன்னுடன் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருவது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 23ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடக்க விழாவில் கூட ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

Advertisment

பா.ஜ.க தனக்கு ஏதாவது சலுகைகள் செய்யும், அதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்ததாகவும், ஆனால் கடைசி வரை பா.ஜ.க எந்தவித சமிக்ஞையும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஆதரவாளர்கள் விலகல், கூட்டணி தொடர்பாக எந்தவித முன்னேற்றமில்லாதது என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டதாகக் கருதப்பட்டது. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்ச சேகர்பாபுவை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். சபாநாயகர் அப்பாவு அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் வரை நடைபெற்றது என்று தகவல் வெளியானது. இந்த சந்திப்பு மூலம் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மீண்டும் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இணையவிருப்பதாகத் தகவல் வெளியானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று போடி தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் பரவி வரும் தகவலுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பிரிந்து கிடக்கிற அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தலையாய கோரிக்கையாக இருக்கிறது. வேறு எந்த கோரிக்கையும் கிடையாது. டிடிவி தினகரன் உள்பட யாருமே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைக்கவில்லை” என்று கூறிச் சென்றார். 

Advertisment