பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து காலக்கெடு விதித்து வந்தார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காததால், தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தனர். அதனை தொடர்ந்து மாநிலங்களவை எம்.பியும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான தர்மர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.தன்னுடன் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருவது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மதுராந்தகத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடக்க விழாவில் கூட ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. பா.ஜ.க தனக்கு ஏதாவது சலுகைகள் செய்யும், அதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்ததாகவும், ஆனால் கடைசி வரை பா.ஜ.க எந்தவித சமிக்ஞையும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஆதரவாளர்கள் விலகல், கூட்டணி தொடர்பாக எந்தவித முன்னேற்றமில்லாதது என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்ச சேகர்பாபுவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். சபாநாயகர் அப்பாவு அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் வரை நடைபெற்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மூலம் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/24/opssekar-2026-01-24-14-50-49.jpg)