சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரம்; நர்சிங் மாணவரை ஆணவக் கொலை செய்த மாமனார்!

intercaste

nursing student honour massacre by woman father for intercaste marriage in bihar

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரை, பெண்ணின் தந்தை மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சுபெளல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதான ராகுல். இவர் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்துள்ளார். இவரும், அதே கல்லூரியில் படித்து வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த தன்னு பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தன்னு பிரியாவின் தந்தை பிரேம்சங்கர் ஜாவுக்கு தெரியவர, இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் ராகுலும் தன்னு பிரியாவும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால் பிரேம்சங்கர் ஜா கோபமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று ராகுல் பயின்று தர்பங்கா மருத்துவக் கல்லூரிக்கு பிரேம்சங்கர் ஜா வந்துள்ளார். அதன் பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ராகுலின் நெஞ்சை நோக்கிச் சுட்டார். இதில் படுகாயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலைச் சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த சக மாணவர்கள், பிரேம்சங்கர் ஜாவை பிடித்து கடுமையாக தாக்கினர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து வந்து பிரேம்சங்கரை மீட்க முயன்றனர்.

இதனையடுத்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் மருத்துவமனையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, ராகுலின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிரேம்சங்கரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Bihar caste honour killing
இதையும் படியுங்கள்
Subscribe