சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம், பாஸ்போர்ட் அலுவலகம், போஸ்டல் வங்கி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
இதில் பெண்கள் அதிகமானோர் குழந்தைகளுடன் வருகின்றனர். அஞ்சல், அஞ்சல் வங்கி, ஆதார் சேவைக்கு குறைந்தபட்சம் 10 லிருந்து 20 நிமிடம் ஆகிறது. இதற்காக வரிசையில் காத்திருக்கும் தாய்மார்கள் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பாலூட்டுவதற்கு சிரமம் அடைந்து அந்தப் பகுதியில் உள்ள மறைவான இடங்களுக்கு சென்று பாலூட்டி வந்தனர்.
இந்நிலையில் அஞ்சல் அலுவலகத்தில் ஆக 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்பட்டு தாய்பாலின் முக்கியதுவத்தை பொதுமக்களுக்கும், தாய்மார்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றனர். இதனையொட்டி அஞ்சலகத்தில் மின்விசிறி வசதியுடன் தாய்மார்கள் பாலூட்டும் சிறிய அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதை தாய்மார்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் நிகழ்ச்சி அஞ்சலக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலக தலைவர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கலைவாணி கலந்து கொண்டு திறந்து வைத்து தாய்பாலின் நன்மைகள் அதன் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். சிதம்பரம் தலைமை அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ஷர்மிளா, அஞ்சலக ஆய்வாளர் குமரவடிவேலு உள்ளிட்ட அஞ்சலக துறையினர்,தாய்மார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.