Advertisment

ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி!

seeman-mic-2

தமிழ்நாட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. சம்பா சாகுபடியில் தற்போது விளைவித்த நெற்பயிர்கள் ஒருபுறம் மழையில் மூழ்கி விவசாயிகளுக்கு பெருநட்டம் ஏற்பட்டுள்ள சூழலில், மறுபுறம் ஏற்கனவே அறுவடை செய்த குறுவை சாகுபடி நெல் மூட்டைகளையும் திமுக அரசு கொள்முதல் செய்ய தாமதிப்பதன் காரணமாக நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர். 

Advertisment

வேளாண் பெருங்குடி மக்களின் கவலையும், கண்ணீரும் அதிகரித்துள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, வெயிலிலும் மழையிலும் தங்கள் கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டியும், உரிய விவசாயிகள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால், திராவிட மாடல் திமுக அரசு உற்பத்தி செலவுக்கு இணையான, மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகின்றது. அக்குறைந்தபட்ச கொள்முதல் விலையிலும் உரிய நேரத்தில்  நெல் கொள்முதலை திமுக அரசு செய்ய மறுப்பதுதான் கொடுமையிலும் பெருங்கொடுமை.

Advertisment

tj-farmer-pro

ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?. நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தை 17% லிருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பருவமழையும் தொடங்கிவிட்ட நிலையில், இத்தனை தாமதத்திற்கு பிறகு தற்போது ஒன்றிய அரசிற்கு அனுமதிகோரி முதல்வர் வெறுமனே கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?. நெல் கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் பெறப்படும் முறைகேட்டினைத் தடுக்க திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? 

நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகம் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நிலையில் அதற்கேற்ற உரிய கொள்முதல் ஏற்பாடுகளை அரசு செய்யத் தவறியது ஏன்?. அமைச்சர்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல் மூட்டைகள் தொடங்கி ஆளுங்கட்சி பிரமுகர்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் நெல் மூட்டைகளையெல்லாம் கொள்முதல் செய்த பிறகே ஏழை விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் அவலம் மாறுவது எப்போது?. திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம், பல்லாயிரம் கோடிகள் முதலீடு, பல இலட்சம் வேலை வாய்ப்பு, இரு மடங்கு பொருளாதர வளர்ச்சி என்று வெற்று பெருமை பேசும் திமுக அரசால், தமிழ்நாட்டு விவசாயிகள் விளைவித்த நெல்மூட்டைகளை பாதுகாக்க கூட போதிய சேமிப்பு கிடங்குகளைக் கட்ட முடியவில்லையே ஏன்?

tn-sec-mks

பல நூறு கோடியில் மதுரையில் கலைஞர் ஜல்லிகட்டு அரங்கம், சென்னையில் கலைஞர் கலையரங்கம் கட்டும் திமுக அரசு, கார் பந்தயம் நடத்தவும், சமாதி கட்டவும் பல நூறு கோடிகளை வாரி இறைக்கும் திமுக அரசு நெல் சேமிப்பு கிடங்குகளை கட்டாமல் வெட்டவெளியில் தார்ப்பாய்களால் மூடி வைப்பது ஏன்?. நெல் கொள்முதல் செய்வதற்கு  போதிய சாக்கு பைகள், சணல் கையிருப்பு இல்லை; மூடி வைக்க தார்ப்பாய்கள்கூட இல்லை; ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் உலகே வியக்கும் நான்கரை ஆண்டுகால சாதனையா?. திமுக அரசு வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டதால் விளைந்த நன்மை என்ன?. 

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரித்துள்ளதாக கூறும் திமுக அரசு, தனிநிதி நிலை அறிக்கை வெளியிட்டும் வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு என்ன காரணம் கூறப்போகிறது?. ஏற்கனவே, பாசன நீர்ப் பற்றாக்குறை, இடுபொருட்கள் கிடைக்கப்பெறாமை, உரம் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, பருவகால மாற்றம் எனப் பல்வேறு தடைகளைத் தாண்டி பயிர் விளைவித்தாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு  கொள்முதல் செய்ய மறுப்பது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பை வீணடித்து வறுமையில் வாடச் செய்யும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து, எவ்வித கையூட்டுக்கும் இடமளிக்காமல் சரியான எடையில், சரியான கொள்முதல் விலையை குறுவை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டுமெனவும், தற்போதைய கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரி படுகை சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

tn govt mk stalin delta farmers paddy stock paddy Naam Tamilar Katchi seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe