Advertisment

“ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” - சீமான் வலியுறுத்தல்!

seeman-mic

சாதிய ரீதியிலான வாக்கரசியலை மனதிற்கொண்டு, சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டமியற்ற மறுப்பதா?. இதுதான் உங்கள் சனாதன ஒழிப்பா? சாதி மறுப்பா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் சாதிய ஆணவப்படுகொலை வழக்கில் ஆளும் திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கு மிக மோசமான நிர்வாகச் செயல்பாடாகும். தனது மகனின் படுகொலைக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து கவினின் பெற்றோர் ஐந்து நாட்களுக்கு மேலாக அறப்போராட்டம் நடத்துமளவுக்கு அவர்களைத் தள்ளியது பெரும் வேதனைக்குரியதாகும். அவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற, அவர்களது வீட்டுக்குச் சென்றபோது கவினின் தாயார் கண்ணீர் வடித்து, கதறியது மனதைக் கலங்கச் செய்தது. பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு பரிதவித்த அந்தத் தாயின் கண்ணீரைக் கண்டு, எதுவும் செய்யவியலாத கையறு நிலையில் கூனிக் குறுகி நின்றேன். 

Advertisment

ஒட்டுமொத்த தமிழ்நாடும் பேசிய இப்படுகொலை குறித்து தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுவரை வாய்திறக்காததும், அலட்சியமாக நடவடிக்கைகளை இவ்வழக்கில் மேற்கொண்டதும் கடும் கண்டனத்திற்குரியது. சனாதன ஒழிப்பு, சாதிய எதிர்ப்பு, சமூக நீதி, சமத்துவம் என்றெல்லாம் நாளும் பேசி, விளம்பர அரசியல் செய்து வாய்ப்பந்தல் போடும்  திமுக அரசு, சாதியத்திற்கு ஆதரவாக மறைமுகமாகத் துணைநிற்பது வெட்கக்கேடானது. தமிழ்த்தேசிய இனத்தின் ஓர்மையையும், தமிழர்களுக்கு இடையேயான சமத்துவத்தையும், இணக்கப்பாட்டையும் ஒருநாளும் ஆளும் திராவிட ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள். சாதி, மதத்தின் பெயரால் தன்னினப் பகை கொண்டு, ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தி, நாங்கள் செத்து விழும்போது, சிந்துகிற இரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாகவே திராவிடக்கூட்டம் இருக்குமென்பதே மறுக்கவியலா வரலாற்றுப்பேருண்மையாகும். 

ஒருவரையொருவர் காதலித்து, மனமொத்து வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் இணையர்கள் மீது சாதிவெறியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டங்களும், ஆணவப் படுகொலைகளும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாத பேரவலங்களாகும். 21ஆம் நூற்றாண்டிலும் நடந்தேறும் இத்தகையப் படுகொலைகளும், கொடூரங்களும் நாகரீகச்சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா? எனும் கேள்வியையும், குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சாதிய ஆணவப்படுகொலைகள் நடைபெறாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கச் செய்யவும் இச்சமயத்திலாவது தனிச்சட்டம் இயற்ற வேண்டியது பேரவசியமாகிறது. கடந்தக் காலத்தில் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இருக்கிற சட்டங்களே போதுமென இப்போது பேசுவது சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?  சனநாயகத் துரோகமில்லையா?

பாலியல் வன்கொடுமைகளே குற்றமென சட்டம்  இருக்கிறபோதுதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ‘பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் – 2012’ (POSCO)  கொண்டு வரப்பட்டது. வன்முறையே குற்றமென சட்டம் வரையறுக்கும்போதுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தியத் தண்டனைச் சட்டமும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் இருந்தபோதுதான் குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் எனும் தடுப்புக்காவல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதேபோல, சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல்?. சமூக நீதி அரசென சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாத ராஜஸ்தான் மாநிலத்தில், ‘ராஜஸ்தான் திருமண இணையர் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் பெயரால் தலையீடு தடுப்பு சட்டம் – 2019’  என ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றியிருக்கும்போது, தமிழ்நாட்டிலும் அதனைச் செய்ய திராவிட மாடல் நாயகருக்கு என்ன தயக்கம்?.

Advertisment

 சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, தண்டனைகள் உறுதிசெய்யப்பட்டால்தான் குற்றங்கள் இல்லாத ஒரு சமூகம் உருவாகும். சாதியரீதியிலான வாக்கரசியலை மனதிற்கொண்டு அதனை செய்ய ஆளும் திமுக அரசு மறுக்குமென்றால், இதுதான் உங்களது சாதி எதிர்ப்பா? இதுதான் உங்கள் சனாதன ஒழிப்பா? திராவிட மாடல் அரசா? பேரவலம். ஏற்கனவே இருக்கும் சட்டங்களைக் கொண்டு சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்கலாம் என சப்பைக்கட்டு கட்டும் முதல்வர் மு.க. ஸ்டாலினுகு, பட்டியல் பிரிவு சமூகங்களுக்கு இடையே நிகழும் சாதிய மோதல்கள், ஆணவப்படுகொலைகளுக்கும், இடைநிலைச் சமூகங்களுக்கு இடையே நிகழும் சாதிய மோதல்கள், ஆணவப்படுகொலைகளுக்கும் ‘பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ பொருந்தாது என்பது தெரியாதா?.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆணவப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டால் அதற்கும் அச்சட்டம் பொருந்தாது எனும் அடிப்படைகூட புரியாதா? சாதிய ஆணவப்படுகொலைகளைப் பொறுத்தவரை அதனைச் செய்பவர்களாகக் குடும்பத்தினரும், உறவினர்களுமே இருக்கிறார்கள் என்பதாலும், அதற்கு சமூகத்தைச் சேர்ந்த பலரும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதாலும், இப்படுகொலைகளைத் தனியேதான் வகைப்படுத்த வேண்டும். எனவே, அதற்குத் தனிச்சட்டம் என்பது இன்றியமையாததாகும்.  ஆகவே, ஆளும் திமுக இனியாவது சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Tuticorin mk stalin Naam Tamilar Katchi act seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe