NTK candidate's name removed and Controversy over mention of deceased in SIR
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோரை இறந்தவர்கள் என குறிப்பிட்டு நீக்கம் செய்திருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் இந்துஜா ரமேஷ். இவரது கணவர் ரமேஷ். இந்த நிலையில், உயிரோடு இருக்கும் இந்துஜா ரமேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இது குறித்து தகவலறிந்த இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். மேலும், மாவட்ட் ஆட்சியருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நான் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன். சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக என்னுடைய மனைவி இந்துஜா ரமேஷ் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை நாங்கள் 6 மாதமாக செய்து வருகிறோம். எஸ்.ஐ.ஆர் சீர்திருத்தம் பணியில் வாக்காளர் பட்டியலை அரசு எடுத்து வருகிறது. அதற்காக நாங்கள் 10 நாட்களுக்கு முன்பாக எஸ்.ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டோம். ஆனால், நேற்று வெளியிட்ட பட்டியலில் எங்கள் பெயர் இறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அரசு இதை செய்தது? நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என்பதற்காக இது மாதிரி செய்யப்பட்டிருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
Follow Us