திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ எம்.பி.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (18.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் ஆணையம் தற்போது மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பதிலளித்தார். அதில், “தற்போது முறையற்ற வகையில் செய்யக்கூடிய இந்த எஸ்ஐஆரை (S.I.R) தான் திமுக எதிர்க்கிறது. இது களத்தில் பிராக்டிக்கலாக செய்ய வேண்டிய ஒரு வேலை. ஆனால் தேர்தல் ஆணையம் போதுமான தயாரிப்பு வேலைகளைச் செய்யத் தவறிவிட்டது. 

Advertisment

தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது. முழுக்க முழுக்க பி.எல்.ஓ.க்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. பி.எல்.ஓ.க்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து.

Advertisment

அசாமில் எஸ்.ஐ.ஆர். கொண்டு வந்தபோது, தேர்தல் ஆணைய அலுவலர்களே எல்லா கணக்கீட்டுப் படிவங்களையும் பூர்த்தி செய்து கொள்வார்கள் என்றும், வாக்காளர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டுக்கும் அசாமுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்?. 12 மாநிலங்களுக்கும் அசாமுக்கும் ஏன் இந்த வித்தியாசம் காட்டுகிறீர்கள். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், அந்தத் தொகுதியில் சாதாரணமாக வசிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும். 

eci

தேர்தல் ஆணையம் முதலில் 11 அடையாள ஆவணங்களைச் சொன்னது. உச்ச நீதிமன்றம் சொன்னதால் ஆதார் சேர்க்கப்பட்டது. ஆனால், 13வது ஆவணமாக, பீகார் எஸ்ஐஆர்-இல், ஜூலை மாதம் 2025-ல் வெளியிடப்பட்ட பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், அதை அடையாள ஆவணமாகக் காட்டலாம் என்று சொல்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உறுப்பினராக இருந்து தேர்தல் ஆணையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை, ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து மாற்றியது. இந்தச் சட்டத்தில், பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் மட்டுமே நியமனத்தில் இருப்பார்கள் என்ற முறையைக் கொண்டு வந்தனர். 

Advertisment

01.12.2023 அன்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில், அதிமுக உறுப்பினர் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று சொல்லவில்லை. இந்தச் சட்டத்தின் விளைவாக, பாஜக தேர்ந்தெடுப்பவர்கள் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படி நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையம் இன்று மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் இந்த எஸ்ஐஆர்-ஐ நடக்கிறது. திமுக எப்போதும் ஒரு முழுமையான, நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 2026இல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடி எந்தவொரு தனி மனிதரின் வாக்கும் பறி போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்