கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அதேபோல் பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் காரில் வெளியே சென்ற தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தயவு செய்து உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தாயாரின் இழப்புக்குப் பிறகு என் வாழ்க்கையிலேயே என்னுடைய 41 குடும்பங்களில் நடந்த உயிரிழப்பு மிகப்பெரிய இழப்பையும், வலியையும் கொடுத்திருக்கிறது. இப்போதைக்கு எதுவுமே பேசக்கூடிய மனநிலையில் இல்லை. இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் அவர்களைச் சந்திப்போம். அவர்களுடைய மிகப்பெரிய பயணம் தொடரும். வாழ்க'' என்றார்.