தமிழக காவல்துறையின் சட்ட ஒழுங்கு டிஜிபி பதவியில் முழுநேர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியாகவே அந்த பதவியை வைத்திருக்கிறது திமுக அரசு.
இந்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், 'தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபி-யின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்த நிலையில், தங்களுக்கு ஏற்ற நபரை, தேர்தல் நேரத்தில் தங்களுக்கு உதவியாக இருக்கும் அதிகாரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு முழுநேர டிஜிபி-யை நியமிக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்.
புதிய டிஜிபி-க்கான மூன்று பெயர்கள் கூட இறுதி உத்தேசப் பட்டியலை UPSC அனுப்பிவிட்டதாக செய்திகள் வரும் நிலையில், மூவரில் ஒருவரை புதிய டிஜிபியாக நியமிப்பதில் பொம்மை முதல்வருக்கும், அவரின் திமுக அரசும் என்ன சிக்கல் இருக்கிறது? இந்த அவல நிலையில், காவலர்கள் வீரவணக்க நாளில் மட்டும் போட்டோஷூட் எடுத்துக் கொள்ள ஆர்வமாக கலந்துகொள்வது வேடிக்கையின் உச்சம்!' என்று குற்றம்சாட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.