சென்னையில் இருந்து காரைக்குடி இடையே தினசரி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 9 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்குடியை நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.
அப்போது ரயில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைக் கடந்து சென்றபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி அடுத்த பேரணி பகுதியில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரயில் இன்ஜின் முன்சக்கரத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால், உடனடியாக விழுப்புரத்திலிருந்து மாற்று இன்ஜின் வரவழைத்து அதில் இணைத்து, 2 மணி நேரம் தாமதமாக ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ஓலக்கூர் - திண்டிவனம் பகுதியில் வந்தபோது திடீரென தண்டவாளத்திற்கும் இன்ஜினுக்கும் இடையே சத்தம் ஏற்பட்டதாக ரயில் ஓட்டுநர் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று சோதனை நடத்தியது. அதில், ஓலக்கூர் அருகே மேல்பேட்டை பகுதியில் விஷமிகள் சிலர் இரும்புத் துண்டை தண்டவாளத்தில் வைத்ததால் தண்டவாளமும் இன்ஜின் சக்கரமும் சேதமடைந்திருந்ததை கண்டறிந்து அதனை சீரமைத்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/20/5-2025-11-20-12-55-48.jpg)
இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். அதில், திண்டிவனம் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் மதுபோதையில் விளையாட்டாக ரயில் தண்டவாளத்தில் இரும்புத் துண்டை வைத்து, அதனை செல்போனில் படம்பிடித்து ரீல்ஸ் போட்டு விளையாடியதும், அந்த இரும்புத் துண்டுதான் பல்லவன் ரயில் இன்ஜின் சக்கரத்தையும் தண்டவாளத்தையும் சேதப்படுத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, ரயில் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆபத்தை உணராமல் செயல்பட்டதாக பீகாரைச் சேர்ந்த 25 வயதான அபிஷேக் குமார், 21 வயதான ஆகாஷ் குமார், 20 வயதான பாபுலால், 23 வயதான தீபக் குமார், 20 வயதான ராஜாராம் ஆகியோர் மீது திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் சுரேஷன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Follow Us