அக்டோபர் 07. நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவியிலுள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்ட வழக்கில் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மத்திய பிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த திரேந்தர் சிங் என்பவரை போலீசார் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அன்றைய தினம் அழைத்து வந்திருக்கிறார்கள். அன்று பிற்பகல் 1 மணிக்கு கைதி திரேந்தர் சிங்கின் வழக்கை விசாரணைக்காக எடுத்த நீதிபதி அருண்சங்கர் வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் நாற்காலியில் அமர்ந்திருந்த திரேந்தர் சிங் திடீரென தனது காலில் அணிந்திருந்த காலணியைக் கழட்டி நீதிபதியை நோக்கி வீசி இருக்கிறார். ஆனால் அந்த காலணி நீதிபதியின் முன்புள்ள சேம்பரில் பட்டு பின் கணினியில் தட்டிக் கீழே விழுந்திருக்கிறது. இந்தத் திடீர் சம்பவத்தை சற்றும் எதிர் பாராத ஒட்டு மொத்த நீதிமன்றமும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. பின் சுதாரித்த வழக்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் காலணியை வீசிவிட்டு தப்ப முயன்ற திரேந்தர் சிங்கை விரட்டிப் பிடித்திருக்கிறார்கள்.

Advertisment

தகவல் கிடைத்து ஸ்பாட்டுக்கு வந்த சேரன்மகாதேவி போலீசார் கோர்ட் வளாகத்தில் உள்ள செல்லில் அடைக்கப்பட்டிருந்த திரேந்தர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். கைதான திரேந்தர் சிங் மீது கன்னியாகுமரி கடையம் பாவூர்சத்திரம் பாளை உள்ளிட்ட பல பகுதிகளில் திருட்டு மற்றும் உண்டியல் உடைப்பு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சேரன்மகாதேவியின் உண்டியல் திருட்டு வழக்கில் கைதாகி பாளை மத்திய சிறையில் இருந்திருக்கிறார் இந்த வழக்கு தொடர்பாக அவர்மீதான குற்றப்பத்திரிக்கை அன்றைய தினம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதின் காரணமாக ஆத்திரம். மேலும் தன் மீதான வழக்கிலிருந்து விடுபட முடியாமல் ஜெயிலேயே அடைக்கப்பட்டிருப்பதால் ஊர் திரும்ப முடியாத சூழல். இந்த ஆத்திரத்தின் காரணமாகத்தான் நீதிபதியை நோக்கி காலணி வீசியதாக கைதி திரேந்தர் சிங் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Advertisment

கரூர் சம்பவத்தில் கண்ணெதிரே நடந்த அநீதியைச் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்த நீதியரசரின் மீது அவதூறு கருத்துக்களை வீசுவது, அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்றது, அடுத்து சேரன்மகாதேவி கோர்ட் உள்ளிட்ட சம்பவங்கள் வியாதி போன்று தொடர்வதை அத்தனை எளிதாகக் கடந்து போய்விட முடியாது. இதுபோன்ற கொடிய சம்பவங்கள் மீண்டும் தலையெடுக்க முடியாதவாறு சட்ட விதிவகைகளை கடுமையாக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.