திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோணப்பட்டி பகுதியில் மூன்று தினங்களாக ஒரு வடமாநில வாலிபர் கிராமப் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சாணார்பட்டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான கோவிந்த கல்சா என்பது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர் வேலை தேடி திருப்பூருக்கு வந்த நிலையில், அங்கு வேலை கிடைக்காததால் பஸ் ஏறி திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். 

Advertisment

அதன் பின்னர் அங்கிருந்து சாணார்பட்டி அருகே கோணப்பட்டி பகுதியில் வேலையும் இல்லாமல், உணவும் இல்லாமல் பசியுடன் சுற்றித்திரிந்துள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, போலீசார் கோவிந்த கல்சாவுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, பஸ் ஏறிச் செல்லுமாறு அனுப்பி வைத்திருக்கின்றனர்.இந்த நிலையில், 1ஆம் தேதி இரவு அந்த வடமாநில இளைஞர் சாணார்பட்டி மெயின் ரோட்டில் உள்ள அழகு முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள நகைக் கடை முன்பு படுத்துத் தூங்கியிருக்கிறார். இதனைப் பார்த்த அந்தப் பகுதியினர், அவரைத் திருட வந்தவராக நினைத்து அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். 

Advertisment

இதனால் பதறிப்போன அந்த இளைஞர் அருகே இருந்த காவல் நிலையத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார். பின்னர் காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் ஏறிய அவர், கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினரும், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொன். குணசேகரன் உள்ளிட்ட போலீசாரும் வடமாநில இளைஞரிடம் கீழே இறங்கி வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். 

siren-police

நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வடமாநில இளைஞரைப் பத்திரமாகத் தீயணைப்பு வீரர்கள் கீழே இறக்கி மீட்டனர். இதையடுத்து, வடமாநில இளைஞரின் உறவினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து வரவழைத்து, அறிவுரை வழங்கி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment