திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான ஜெய் என்ற இளைஞர் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி ஒருவர், 30 ஆம் தேதி மாலை பள்ளியில் உள்ள கழிவறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, கழிவறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஜெய், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது வகுப்பாசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறார்.
இதையடுத்து, மாலை வீட்டிற்குச் சென்ற சிறுமிக்கு பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த சிறுமி, பள்ளி கழிவறையில் தனக்கு நடந்த கொடூரத்தை விவரித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பில் சரியான பதில் அளிக்காததால், ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.ஆர். நகர் காவல்துறையினர், பெற்றோர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அசாம் இளைஞர் ஜெய்யைக் கைது செய்யுமாறும், பள்ளி நிர்வாகத்தை எதிர்த்தும் பெற்றோர் கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, கே.வி.ஆர். நகர் சரக உதவி ஆணையர் ஜான் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமைச் சேர்ந்த ஜெய் (27) என்பவரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதன்பின்னர், காவல்துறையினர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பெற்றோர் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.