Northeast monsoon to intensify again for low pressure area
வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35- 45 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல் 10ஆம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 10 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us