North indians should not be made gatekeepers' - People of Semmanguppam are upset Photograph: (cuddalore)
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டானது 'Non inderlocking' கேட் என்பதால் அதை மூடுவதற்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்படும் என்ற நிலையில் இன்று காலை ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடுவதற்கான தகவல் முறையாக அளிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. இருப்பினும் இந்த விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்தோடு கைது செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் ஐந்து பேர் அந்த பள்ளி வேனில் பயணித்துள்ளனர். ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செழியன் என்ற சிறுவன் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் போகும் வழியிலேயே செழியன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இந்த விபத்துகுறித்து அந்தப்பகுதி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட கேட் கீப்பர் வடமாநில நபர் என்பதால் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. ''கடலூரில் இருந்து எல்லா பகுதிகளிலும் இந்திக்கார்களே கேட் கீப்பர்களாக உள்ளனர். ஏன் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் இல்லையா? நாம் பேசுவதும் அவர்களுக்கு புரியவும் மாட்டேங்குது. இந்திக்காரர்களை தமிழ்நாட்டில் கேட் கீப்பர்களாக போடக்கூடாது. கேட் கீப்பர் கவனக்குறைவால் விட்டுட்டான். கொஞ்சம் கூட தமிழர்களை மதிப்பது கிடையாது. கேட்ட சாத்துன்னு சொன்னா சாத்துவது கிடையாது. திறக்க சொன்னா திறப்பது கிடையாது. காரணம் அவங்களுக்கு தமிழ் தெரியாது. ரயில்வே நிர்வாகம் முழுக்க முழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கொந்தளிப்புடன் கோரிக்கை வைத்துள்ளனர்.