தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் எடப்பாடி பழனிசாமி இன்று (24.08.2025) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “அமைச்சர் ரகுபதி எட்டப்பர். அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர். சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவருக்கு அமைச்சர் கொடுத்து அழகு பார்த்தார். திமுகவில் அடைக்கலம் புகுந்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவர் கொடுக்கிற செய்தியை பேசிக்கொண்டு இருக்கிறார். அதிமுக தொண்டன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகச் சொல்கிறார். நான் நிரபராதி என்று விடுதலையாகி இங்கு நிற்கிறேன்.
திமுக அமைச்சர்கள், முதல்வர், முன்னாள் அமைச்சர்களுக்கு தில்லு திராணியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துங்கள். ரகுபதி எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது நானும் எம்.எல்.ஏ.வாக இருந்தேன், அப்போது, உங்கள் சொத்து என்ன?. சாதாரண திருவள்ளூர் பஸ்ஸில் ஏறி சென்னைக்கு வருவார். அவருடைய அண்ணன் சேலத்தில் வேலையில் இருந்தார். அவரைப் பார்க்க பஸ்ஸில் வந்து செல்வார். நான் அப்போது 1992இல் சேலம் மாவட்டச் செயலாளராக இருந்தேன். இப்போது உங்களுக்கு எத்தனை காலேஜ் இருக்குது, எவ்வளவு பினாமி சொத்து இருக்குது, நாவடக்கம் தேவை.
சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. கீழே இருக்கும் சக்கரம் மேல வரும். அப்போது நீங்கள் என்னென்ன ஊழல் செய்தீர்களோ, அத்தனையும் தோண்டி எடுக்கப்பட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். ரகுபதி துறையில் பல்வேறு ஊழல் நடக்கிறது. மைன்ஸ் துறை அவரிடம் தான் இருக்கிறது. இப்போது ஒரு தகவல் வருகிறது, டன்னுக்கு 100 ரூபாய் கிரஷர் உரிமையாளர்களிடம் கேட்பதாகத் தகவல் வருகிறது. எல்லாவற்றையும் தோண்டி எடுத்தால் நீங்கள் இருக்கும் இடமே வேறிடமாக இருக்கும். யாராவது சட்டத்துக்குப் புறம்பாக டன்னுக்கு 100 ரூபாய் கொடுப்பது தெரியவந்தால் அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்கள் கிரஷர் தடுத்து நிறுத்தப்படும். நீங்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். நீங்கள் 100 ரூபாய் ஏற்றினால், அவர் 500 ரூபாய் விலை ஏற்றிவிடுவார். பிறகு மக்கள் எப்படி வீடு கட்ட முடியும்? ரகுபதி அவர்களே இதை தொடர்ந்தால் நீதிமன்றப்படி மீண்டும் ஏறுவீர்கள். பாதுகாப்பான இடத்துக்கு உங்களை அனுப்பிவிடுவார்கள்” என்றார்.