Advertisment

மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

rajya-sabha-file

மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாசல பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் (ஏப்ரல் 2ஆம் தேதி) முடிவடைய உள்ளது.  

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஓய்வு பெறும் மாநிலங்களவை உறுப்பினர்களின் காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 18ஆம் தேதி (18.02.2026) வெளியிட்டது. அதில், “தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி 26 (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 05 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 06ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் மார்ச் 09ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆகும். 

Advertisment

போட்டியிருப்பின் வாக்குப்பதிவு மார்ச் 16ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 09:00 முதல்  மாலை 04:00 மணி வரை நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை அன்று (மார்ச் 16ஆம் தேதி - திங்கட்கிழமை) மாலை 05:00 மணிக்கு  நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (26.02.2026) தொடங்குகிறது. இருப்பினும் திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காததும் கவனிக்கத்தக்கது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். சுழற்சி முறையில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவார்கள். 

அவ்வாறு காலியாகும் இடங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்படும். மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது மாநிலச் சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் (எம்.எல்.ஏ.க்கள் மூலம்) மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒற்றை மாற்றத்தக்க வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Election nomination RAJYA SABHA ELECTION Rajya Sabha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe