மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் கடந்த 06ஆம் தேதி (06.10.2025) முதல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி என நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த (2025) ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோக்கர், பிலிப் அகியான், பீட்டர் ஹர்விட் என 3 பேருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூவருக்கும் 8.25 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது ராயல் ஸ்வீடிஸ் அறிவியல் அகாடமி சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான நிபந்தனைகள் அடையாளம் காணுதல், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காகவும் வழங்கப்படுகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 56 ஆண்டுகளாகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 57வது முறையாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.