மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் நேற்று (06-10-25) முதல் வெளியாகி வருகின்றன. அதன்படி, 2025ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இந்தாண்டு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேர் இ.பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குப்படுத்துவது பற்றிய கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.10.41 தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.