புதுப்பிக்கப்பட்டது
'No share in power; Is AIADMK merger possible?'- EPS, OPS meet Modi Photograph: (admk)
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு மூன்று தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இதற்காக வரும் 26 ஆம் தேதி தூத்துக்குடிக்கு மோடி வர இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எடப்பாடி மட்டுமல்லாது ஓ.பன்னீர்செல்வமும் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் இருவரையும் சந்திக்க மோடி நேரம் ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக மோடியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் முக்கிய கோரிக்கைகளாக இருக்க போகிறது என்று கூறப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி அறிவித்த நொடியில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. எடப்பாடி பழனிசாமியை கூட்டணி அறிமுக நிகழ்ச்சியில் பேச விடவில்லை; எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா கூறவில்லை; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் ஏற்படும் என பல சர்ச்சைகள் எடப்பாடியை சுற்றி வருகிறது. ஆனாலும் 'தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். கூட்டணியில் பங்கு தர நாங்கள் ஏமாளிகள் அல்ல' என எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார்.
இதனால் மோடி-எடப்பாடி சந்திப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்ற கோரிக்கையை எடப்பாடி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பிறகு தன் மீது பாஜக காட்டி வரும் பாராமுகத்தால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் ஓ.பன்னீர்செல்வம், புதுக்கட்சி ஆரம்பித்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்ற புது ரூட்டில் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. பிரிந்து கிடக்கும் அதிமுகவை சேர்க்கும் முயற்சியில் பாஜக ஆர்வம் காட்டாத நிலையில் இறுதி முயற்சியாக 'அதிமுக இணைப்பு சாத்தியமா?' என்ற கோரிக்கையுடன் ஓபிஎஸ் மோடியை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.