அண்மையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், விஜய்யின் தமிழகவெற்றிக் கழகம் கட்சியோடு கூட்டணி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisment

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் விஜய்யின் கட்சியில் நீங்கள் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறதே. அது உண்மையா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ''இதுவரை என்னை யாரும் கூட்டணியில் சேர்வது குறித்து தொடர்பு கொள்ளவில்லை. தனிப்பட்ட முறையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் நல்ல மனிதர். அனைத்து மக்களிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடியவர். அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு நான் உள்ளபடியே மனசாட்சியோடு வரவேற்கிறேன்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஓபிஎஸ் என்றும் எங்கள் அண்ணன் தான்' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், ''அவருக்கு நான் அண்ணன் என்றால் அவர் எனக்கு தம்பி'' என்றார்.

Advertisment

பாஜக கூட்டணிக்கு மீண்டும் நீங்கள் வருவீர்களா? வரும் 26ம் தேதி மோடி தமிழக வரும் நிலையில் அவரை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது' என்ற கேள்விக்கு 'ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.