சென்னை, வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
“எனக்கு முன்னாள் பேசியவர்கள் அடுத்தாண்டு தேர்தல் குறித்து தெளிவாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். தீயசக்தி திமுகவை அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் அம்மா அவர்கள் சோதனைகளைத் தாங்கி கட்டிக் காத்தார்கள். இருபெரும் தலைவர்கள் இருக்கும்போது பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களைக் கொண்டுவந்து சாதித்தனர். அவர்களது ஆட்சியில்தான் மகளிருக்கு கல்வி வேலைவாய்ப்பு போன்ற அற்புதமான திட்டங்கள் கிடைத்தன. அமைதி, வளம், வளர்ச்சி எனும் கொள்கையை தாரக மந்திரமாகக் கொடுத்தனர். 
எம்ஜிஆரும், அம்மாவும் வகுத்துத்தந்த மக்கள் நலன், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை எக்காலமும் பேணிக்காப்பது அதிமுக. ஆட்சியில் இருக்கும்போதும் பத்திரிகை, ஊடகம் விமர்சனம் செய்தார்கள், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் விமர்சனம் செய்கிறார்கள். அதிமுக இருப்பதால்தான் ஊடகம் இயங்குகிறது என்பது விளங்குகிறது.
இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு இல்லை, நம்மை தான் வாரிசாக பார்த்தார்கள். நமக்கு நன்மை பயக்கும் திட்டங்களை வழங்கியதால்தான், இன்றைக்கும் அதிமுகவை எவராலும் தொட்டுப்பார்கக் முடியவில்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்பதற்கு நம்மோடு இருந்தவர்களே எதிரியோடு கைகோர்த்து சோதனை கொடுத்தார்கள். பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானம் கொண்டுவரும்போது, ஸ்டாலினும், திமுகவினரும் எப்படி நடந்துகொண்டனர் என்பதை தொலைக்காட்சியில் பார்த்தீர்கள்.
எல்லோருடைய ஆதரவால் தீர்மானம் நிறைவேற்றுகின்ற நிலையில் என் மேஜை மீது திமுக எம்.எல்.ஏக்கள் டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகரை இழுத்துத்தள்ளி அவரது இருக்கையில் அமர்ந்தார்கள். அப்படிப்பட்ட கொடுமைகளை ஏற்படுத்தியவர் ஸ்டாலின். அதையெல்லாம் மீறி வென்றதும் பொறுத்துக்கொள்ள முடியாமல் சட்டையைக் கிழித்துக்கொண்டு வீதியில் திரிந்தவர்தான் ஸ்டாலின். 
ஸ்டாலின் அவர்களே அன்று சட்டையை மட்டும்தான் கிழித்தீர்கள் அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், அப்போது எந்த நிலையில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை.
அதோடு அதிமுக ஆட்சியை உடைக்க சதித்தீட்டம் தீட்டப்பட்டது, உடைக்க வழக்குகள் போடப்பட்டது, அதையெல்லாம் தாண்டித்தான் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். இன்றைக்கும் திமுக நம் ஆட்சியைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அதிமுக பாஜகவோடு கூட்டணி என்றுதான் சொல்கிறார், ஆட்சியில் குறை இருக்கிறதா என்று கேட்டோம், அதைச் சொல்ல முடியவில்லை, அப்படியான சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். 
இங்கே அமர்ந்திருக்கும் முன்னாள அமைச்சர்கள் என்னோடு சிறப்பான முறையில் பணியாற்றினார்கள், அதனால் நல்லாட்சியை மக்களுக்குக் கொடுத்தோம். அதே ஆட்சி தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த செயற்குழு, பொதுக்குழுவில் வீற்றிருக்கிற அத்தனை பேரும் நினைத்தால் நிச்சயம் அது நிறைவேறும்.
இங்கே வந்திருக்கும் அனைவரும் பல்வேறு தேர்தலில் களம் கண்டவர்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிகளில் களப்பணியாற்றி வேட்பாளர்களாக வெற்றி பெற்றவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் திறமையானவர்கள். எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அரசியல் பாடம் கற்றவர்கள். ஆகவே அத்தனையும் உங்கள் அனுபவத்தில் இருக்கின்றது அதை இந்தத் தேர்தலில் பயன்படுத்துங்கள். நிச்சயம் 100% வெற்றி பெறுவோம் அதிமுக ஆட்சி மலரும், இதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. 
மரியாதைக்குரிய சிவிசண்முகம் குறிப்பிட்டார், நாமும் தேர்தல் வகுப்பாளரை வைத்திருக்கிறோம், நம்முடைய கணக்கு நமக்குத் தெரியும், அடுத்தாண்டு தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். நம்முடைய கழக நிர்வாகிகளுக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது அதைப் போக்குவது என் கடமை என்பதால் சில விளக்கங்களைக் கொடுக்கிறேன்.
தலைமைக் கழக நிர்வாகிகள் குறிப்பிட்டது போல வெறுமனே 2 லட்சம் வாக்குகளை 43 தொகுதிகளில் இழந்தோம் அதனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அதுவும் யார் சூழ்ச்சியால் வாக்குகள் இழந்தோம் என்பதையும் சொனனர்கள். 
2011-21 வரை பொற்கால ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. அக்காலகட்டத்தில் நாம் தேர்தலையும் சந்தித்தோம். 1991ல் திமுக 2 இடத்தில் தான் ஜெயித்தது. அம்மாவுடைய கூட்டணி சரித்திர சாதனை படைத்தது. அதன்பிறகு 1996ல் நாம் நான்கு இடங்களில்தான் வென்றோம். 2001ல் மீண்டும் அதிமுக வென்று அம்மா முதல்வரானார். 2006ல் திமுக 96 இடங்களில் வென்று மைனாரிட்டி ஆட்சி நடத்தியது.
2011ல் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று, திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியவில்லை. அப்போது கருணாநிதியே இருந்தார், அப்போதே உங்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடமில்லை. 2014ல் ஒரு எம்பிகூட திமுக வெற்றி பெற முடியவில்லை. அதிமுக 37 இடங்களில் வென்றது. 
2016ல் அம்மா யாருடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களில் வென்றார். இப்படிப்பட்ட இயக்கத்தைப் பற்றி திமுக தலைவர் விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும், அது தெரியாமல் ஸ்டாலின் பேசிவருகிறார்.
நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வேறு விதமாக வாக்களிப்பார்கள். அதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. 2019 எம்பி தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டில் தான் வென்றோம், அப்போது 22 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது, அதில் 9 இடங்களில் நாம் வென்றோம். 
2021ல் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வென்றோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவும் போட்டியிட்டது, நிலக்கோட்டை தொகுதி, நாடாளுமன்றத்தில் திமுக சுமார் 39 ஆயிரம் வாக்குகளில் வெல்கிறார்கள், அதே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 20 ஆயிரம் வாக்குகளில் வென்றோம். ஒரே நேரத்தில் இரு தேர்தல்கள், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக போட்டியிடுகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் திமுக அதிக வாக்குகள் வாங்கியது, சட்டமன்றத்தில் அதிமுக அதிக வாக்குகள் வாங்கியது. இப்படி 9 சட்டமன்றத் தொகுதியில் திமுகவை வீழ்த்தியது, அதுவே நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை திமுக அதிகமாக வாங்கினர். இதுதான் நிலைமை.
அதுமட்டுமல்ல, 2024 நாடாளுமன்றத் தேர்தல் 39 தொகுதி திமுகதான் வென்றது. ஆனால், நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் 10 தொகுதிகளில் அதிமுகவே அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இன்று பாஜக, அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. 2024 எம்பி தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தால் 41.33%. 
இந்த 41.33% என்று கணக்கு போட்டுப் பார்த்தால் 84 சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இங்கெல்லாம் வெற்றி உறுதி. 15 சட்டமன்றத் தொகுதியில் 1% வாக்குதான் குறைவு, 18 சட்டமன்றத் தொகுதிகளில் 1 முதல் 2% வாக்குகள் தான் குறைவு. 
2021 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் ஒப்பிட்டுச் சொன்னேன். 2021ல் 75 இடங்களில் வென்றோம், இப்போது அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தபின் 84 இடங்களில் வென்றிருக்கிறோம். 2019ல் 2 இடங்களில் வென்று 75 தொகுதிகள் என்று சொன்னால், இப்போது 84 தொகுதிகள் உறுதி. எனவே, வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும். 
நம்முடைய தீர்மானத்தில் கூட கொடுத்திருக்கிறோம், திமுக கவர்ச்சிகரமாக 525 அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு வந்து. நான்கில் ஒரு பங்கு அறிவிப்பை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை. அதில் முக்கியமானவை என்றால் கல்விக்கடன் ரத்து இல்லை, கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை, பெட்ரோல் டீசல் மானியம் குறைக்கவில்லை, நீட் தேர்வு ரத்து என்றனர், ரகசியம் இருக்கிறது என்றார், துணை முதல்வர், ரகசியத்தை சொல்லவே இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்றனர் உயர்த்தவில்லை, ஏழை மக்களை ஏமாற்றிவிட்டனர். 
அரசு காலிப்பணியிடங்கள் அரசாங்கத்தில் மூன்றரை லட்சம், அரசு சார்ந்த இடங்களில் 2 லட்சம் என மொத்தம் 5.5 லட்சம் பதவிகள் நிரப்புவோம் என்று சொன்னார்கள், நிரப்பவில்லை, வெறும் 50 ஆயிரம் பேர் தான் நிரப்பினர். இந்த நான்கரை ஆண்டுகளில் 75 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். அதோடு, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத்தங்கம், அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் இப்படி மக்களுக்கு நன்மை பயக்கும் அதிமுகவின் திட்டங்களை நிறுத்தியதுதான் அவர்கள் சாதனை. 
அடிக்கடி ஸ்டாலின் சொல்வதெல்லாம் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். எப்போது கொடுத்தார்கள்..? அதிமுக சொன்ன பின்னர்தான் கொடுத்தனர். அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்து, அதிமுகவின் அழுத்தம் காரணமாகத்தான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். வெறும் நான்கு மாதங்கள் தான் கொடுக்க முடியும், 56 மாதம் கொடுக்கவில்லை, குடும்பத் தலைவியின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்தாண்டு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். அதுவும் தேர்தலுக்காகத்தான் கொடுக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கிக் கொள்வார்கள், ஆனால் ஓட்டு மட்டும் அதிமுகவுக்குத்தான் போடுவார்கள்.
ஸ்டாலின் மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டார், இளைஞர்களின் செல்வாக்கையும் இழந்துவிட்டார். அதனால்தான் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கொடுக்கப்பட்டது. நாங்கள் தொர்ந்து வலியுறுத்தியும் ஸ்டாலின் இதற்கு உடன்படவில்லை. இன்று மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால் 10 லட்சம் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கொடுப்பதாக அறிவித்துள்ளார், மாணவர்கள் நலன் கருதி கொடுக்கவில்லை, தேர்தலை மனதில் வைத்து கொடுக்கிறார்கள்.
அதுவே, கல்லூரி திறக்கும் முன் கொடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். 5 மாதம் கழித்து கொடுப்பதால், மாணவர்கள் அவருடைய சொந்தப் பணத்தில் லேப்டாப் வாங்கி அதன்மூலமாக அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கொடுப்பதால் என்ன பயன்? கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை, உரிய நேரத்தில் ஏன் கொடுக்கவில்லை.? திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் அவசர அவசரமாக லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போராட்டம் நடத்திய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர், அநீதி இழைத்தனர். டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் விளைந்த நெல்லை கொள்முதல் நிலையம் கொண்டு சென்றால், அங்கு கொள்முதல் செய்யவில்லை. தொடர் மழை, 15 நாள் கொள்முதல் நிலையத்தை மூடிய காரணத்தினால், சாலை ஓரத்தில் நெல் மூட்டைகளை குவித்து வைத்தார்கள். கொள்முதல் நிலையத்துக்கு முன்பாகவும் குவித்துவைத்தனர், மழையால் நெல்மணிகள் முளைத்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 
நான் ஓடோடிச் சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி விவரம் கேட்டேன், 15 நாட்களாக காவல் காத்துக்கொண்டிருக்கிறோம், கொள்முதல் செய்யவில்லை, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லையும் குடோனில் அடுக்கி வைத்துள்ளனர். இப்படி பட்ட அவநிலை இருக்கிறது என்று சொன்னார்கள். திமுகவிலிருந்து யாரும் செல்லவில்லை, உதயநிதி டெல்டாவுக்குப் போனார். ஆனால் விவசாயிகளை சந்திக்காமல் ரயில் நிலையம் சென்று சரக்கு ரயிலுக்கு கொடி காட்டிவிட்டு வந்துவிட்டார். அவருக்கு விவசாயிகளை பார்ப்பதற்கு அச்சம். அதனால் விவசாயிகளை சந்திக்காமல் சென்றார் உதயநிதி. விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளிய அரசு திமுக அரசு.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஏழை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏழை மக்களைப் பாதுகாப்பதே சிறந்த அரசு. அரிசி பருப்பு எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது, கட்டுமான பொருட்கள் ஜல்லி, மணல், கம்பி எல்லாம் உயர்ந்துவிட்டது. மின்கட்டணம் சுமார் 52% உயர்த்திவிட்டனர், ஆண்டுக்கு 5% உயர்த்துகிறார்கள். இதே ஸ்டாலின் ஒரு காலத்தில் மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் என்றார். நாம் அம்மா ஆட்சியில் குறைவாகத்தான் உயர்த்தினோம். இப்போது கரண்ட் பில்லைக் கேட்டால் உண்மையாகவே ஷாக் அடிக்கிறது. வீட்டு வரி 100% உயர்வு, கடை வரி 106% உயர்வு, குடிநீர் வரி, குப்பை வரி என்று எல்லாவற்றையும் உயர்த்திவிட்டனர்.
அதிமுக ஆட்சியை ஒப்பிட்டுப் பாருங்கள், மக்களுக்கு அதிமுக ஆட்சியில் நன்மை கிடைத்தது, திமுக ஆட்சியில் வரி மேல் வரி போட்டு மக்கள் ரத்தம் உரிஞ்சுகின்ற நிலை. நெசவாளர் நிலை பரிதாபம், நெசவுத் தொழில் நலிவடைந்துவிட்டது, விசைத்தறி தொழில் நலிந்துவிட்டது சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை, தொழிலாளர்கள் வறுமையில் வாடி, உடல் உறுப்புகளை விற்கும் நிலை வந்துவிட்டது. உடல் உறுப்பை விற்று வாழ்க்கை நடத்தும் துர்ப்பாக்கிய நிலை திமுக ஆட்சியில் தான் நடக்கிறது. 
திமுக எம்.எல்.ஏ நடத்தும் மருத்துவமனையில் வறுமையில் வாடும் தொழிலாளர்களின் கிட்னியை முறைகேடாகப் பெற்றது பற்றி இதே திமுக அரசு விசாரித்தது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை, அதிமுக ஆட்சியில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். உடல் உறுப்பைக் கூட திமுக விட்டுவைக்கவில்லை.
போக்குவரத்து முன்னாள் ஊழியர்கள் போராடித்தான் பணம் பெறும் சூழ்நிலை நிலவுகிறது. மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து என்று ஸ்டாலின் சொல்கிறார், ஆனால், ஓட்டை உடைசல் பேருந்துதான் இயங்குகிறது. மக்களுக்கு இதனைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த விவரங்களை குறிப்பிடுகிறேன்.
தொழிற்துறை அதிமுக ஆட்சியில் மிகச்சிறப்பாக இருந்தது. அதிமுக ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகிறது. 
அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. 
திமுக அரசும் முதலீடு மாநாடு நடத்தினார்கள், அன்மையில் ஸ்டாலின் ஜெர்மன் செல்லும்போது கொடுத்த பேட்டியில் 922 ஒப்பந்தங்கள், போடப்பட்டு பத்தரை லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு முதலீடுகள் எல்லாம் தொடங்கும்போது சுமார் 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார், 77% ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் சொன்னார், அப்படி 77% என்று சொன்னால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். தொழிற்துறை மந்திரியிடம் வெள்ளை அறிக்கை கேட்டோம், வெள்ளை பேப்பரை வெளியிட்டார், அதுதான் உண்மை, எதையுமே செய்யவில்லை, செய்தால்தானே சொல்லமுடியும். பொய்யைப் பேசி பேசி உண்மையாக்கப் பார்க்கிறார்கள்.
திமுக ஆட்சியில் எந்த பெரிய திட்டமும் இல்லை, அதிமுக ஆட்சியின் திட்டங்களைத்தான் ஸ்டிக்கர் ஒட்டி திறந்துகொண்டு இருக்கிறார்கள். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது, ஸ்டிக்கர் ஒட்டி திறந்தார், கோவையில் அவிநாசி ரோட்டில் பிரமாண்ட மேம்பாலம் கட்டியது அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் ரயில்வே குறுக்கே, சாலை சந்திப்பில், ஆற்றின் குறுக்கே என எல்லா மேம்பாலங்களையும், சாலை வசதி, கூட்டுக்குடிநீர் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இப்படி பல திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக. நீங்கள் ஏதாவது ஒரு திட்டம் கொண்டுவந்தீர்களா? இல்லை. 
சுமார், 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி மட்டுமே. 2019-20 கொரோனா காலம் வருமானம் இல்லை, வரியே இல்லாமல் ஓராண்டு ஆட்சி புரிந்த ஒரே அரசு அதிமுக அரசு. அந்த காலத்தில் கூட ஏழை மக்களுக்காக 11 மாதம் விலையில்லா உணவுப் பொருள் கொடுத்தோம். கொரோனா பற்றி எதுவும் தெரியாமல் கூட விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். பாரதப் பிரதமர் அனைத்து முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு கொரோனா வைரஸைத் தவிர்ப்பதில் முதல் மாநிலம் என்று பாராட்டினார், பிற மாநிலங்கள் நம்மை பின்பற்றச் சொன்னார்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பதுதான் தினமும் செய்தியாக இருக்கிறது. போதைப் பொருள் தடுக்க திறமையற்ற அரசு. ஏனெனில், போதை பொருள் விற்பவர்களில் பாதி பேர் திமுகவினர் தான். எல்லா துறைகளிலும் ஊழல், டாஸ்மாக் துறை, ஒப்பந்தம் மற்றும் விற்பனை முறைகேடு, மணல் கொள்ளை, போக்குவரத்து, மின்சார வாரியத்தில் ஊழல். மதுரையில் மாநகராட்சியில் 200 கோடி ஊழல் செய்தனர். 
இப்போது நகராட்சித் துறை ஊழலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில் முதலாவதாக ஒருவர் போகப் போகிறார். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது. அடுத்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள்.
சென்னை மாநகராட்சியில் கழிப்பறை பராமரிப்பு ஊழல், மின்சார டிரான்ஸ்பார்மர் டெண்டரில் ஊழல், பத்திரப்பதிவு ஊழல் என்று ஊழலில் திளைக்கும் ஒரே அரசு திமுக அரசு. விலையில்லா வேட்டி சேலைக்கு தரமற்ற நூலைக் கொடுத்து ஊழல் நடந்துள்ளது. 
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு பணி ஆண்டுக்கு ஒருமுறை டெண்டர் விடுவார்கள். அடுத்து திமுக அரசு ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்துகொண்டு, மூன்றாண்டுக்கு டெண்டர் விட்டு கமிஷன் பெறுவதற்குத் தயாராகிவிட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தனர், இப்போது திமுக அமைச்சர்கள் எத்தனை பேர் மீது வழக்கு, இன்னும் எத்தனை பேர் மீது வழக்கு வரும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். 
பொன்முடி, அவரது மனைவி மீது சொத்துக்குவிப்பு வழக்கு, செந்தில் பாலாஜி வெளியே வரமுடியாத அளவுக்கு வலிமையான வழக்கு, துரைமுருகன் மணல் ஊழலில் மாட்டியிருக்கிறார். நேரு நகராட்சி நிர்வாகத்துறை வேலைவாய்ப்பு ஊழல், அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு, எ.வ.வேலு மீதும் ஊழல் வழக்கு உள்ளது, ஐ.பெரியசாமி மீது வீட்டுவசதி வாரிய மோசடி, தங்கம் தென்னரசு மீது சொத்துகுவிப்பு வழக்கு, சாத்தூர் ராமச்சந்திரன் சொத்துக்குவிப்பு வழக்கு, ரகுபதி சிறைத்துறையில் உணவு வழங்கல், சிறை வார்டன்கள் இடமாற்றம் ஊழல், ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை துணை போக்குவரத்து ஆணையரிடம் 35 லட்சம் பறிமுதல் வழக்கு, சக்கரபாணி பொங்கல் தொகுப்பு ஊழல். அவர் வெல்லம் கொடுத்ததை மறக்க முடியாது ஒழுகும் வெல்லத்தைக் கொடுத்தவர் தான் சக்கரபாணி. சிவசங்கர் இப்படி பல பேர் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர், நீங்களா எங்களைப் பற்றி பேசுகிறீர்கள்? 
திமுகவுக்கு கலெக்சன், கமிஷன், கரப்ஷன் என்பதுதான் தாரகமந்திரம். இந்த பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் எங்கே இருப்பார்கள் என்று தெரியவில்லை, வெளியில் இருப்பது சந்தேகம், ஏனெனில் நடவடிக்கை தொடங்கிவிட்டனர், பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள். 
பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோ வெளியிட்டார், உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள் என்றார், 30 ஆயிரம் கோடி என்றால் எத்தனை டிபார்ட்மென்ட்டில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்? இதெல்லாம் அதிமுக ஆட்சியில் தோண்டியெடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்தக்காலம் முதல் இந்தகாலம் வரை திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக. எப்போது திமுக வந்தாலும் ஊழல் தொடர்ந்து வரும். திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் மரணம் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு வந்தது, உடனே டெல்லிக்குப் போனார்கள் இதில் என்ன பயம்? திமுகவினரைக் காப்பாற்ற போகிறார்கள். பிறகு அண்ணாநகர் சிறுமி வழக்கு சிபிஐக்கு போகிறது, அதையும் எதிர்த்து மேல்முறையீடு சென்றனர். அதோடு, ஆர்ம்ஸ்டாராங் கொலை வழக்கு உறவினர்கள் வழக்குப்போட்டனர், சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தவிட்டதை எதிர்த்து டெல்லிக்கு போனார்கள். இதெல்லாம் எவ்வளவு வெட்கக்கேடானது. யாரையோ காப்பாற்ற இந்த அரசு துடிக்கிறது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இதெல்லாம் விசாரிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவார்கள்.
எஸ்.ஐ.ஆர் என்றாலே ஸ்டாலின் அலறுகிறார், ஏனெனில் எல்லாம் கள்ள ஓட்டில் தான் ஜெயித்தனர். அதிலும் சென்னையில் கேட்க வேண்டியதில்லை, இறந்தவர்கள் எல்லாம் உயிர்பெற்று வந்துவிடுவார்கள். நாளையோடு எஸ்.ஐ.ஆர் முடிவடைகிறது நாளை இறுதி நாள் யாராவது விடுபட்டிருந்தால் சேர்த்துவிடும்படி அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறேன். 
இதை எதிர்க்கவேண்டிய அவசியம் என்ன..? இறந்தவர்கள், இடம் மாறியவர்களை நீக்குவதில் என்ன தவறு? ஸ்டாலின் எதிர்த்தார், இப்போது திமுக விழிப்போடு இருக்க வேண்டுமாம், ஒருபக்கம் எதிர்த்துவிட்டு ஒரு பக்கம் செயல்படுகிறார்கள். சென்னையில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாக்குகள் அகற்ற வேண்டிய சூழல் இருக்கிறது, தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும். முறைகேடாக பல லட்சம் பேர் விடுவிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இவர்களை விடுவிக்கவில்லை  என்றால் அடுத்தாண்டு தேர்தலில் இந்த வாக்குகளை வைத்து வெற்றி பெறலாம் என்பதாலே ஸ்டாலின் துடிக்கிறார்.
அதிமுக பாஜகவின் அடிமை என்கிறார், அதிமுக யாருக்கும் அடிமையில்லை. இதே திமுக கருணாநிதி இருக்கும்போது 1999 எம்.பி. தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் இருந்தது, 2001 சட்டமன்றத் தேர்தலிலும் அங்கம் வகித்தது. திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி. 
வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க எல்லா கட்சியும் கூட்டணி வைப்பது இயல்பு, அதிமுகவின் கூட்டணியில் இருந்த கட்சிகள் இன்று திமுகவுடன் இருக்கின்றன, திமுகவில் இடம் பெற்ற கட்சிகள் இங்கு இருக்கிறது. ஆனால் ஸ்டாலினால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அதனால் கதறுகிறார். 
23-06-1999 அன்றைய முரசொலி 6ம் பக்கத்தில் கருணாநிதி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..? சிறுபான்மை மக்களிடம் பாஜக பற்றி ஒருசில சந்தேகத்தை உருவாக்கி வைத்திருப்பது உண்மைதான். பொய்யான பிரசாரம் செய்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு  இளைஞர்களாகிய உங்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறார். பாஜக நல்ல கட்சி என்று உங்கள் தலைவரே சொல்லி இருக்கிறார். ஆனால், நாங்கள் கூட்டணி வைத்தால் மட்டும் ஏன் விமர்சிக்கிறீர்கள்?
உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுகதான் அடிமை, 2011ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அறிவாலயத்தில் மேல்தளத்தில் சிபிஐ ரெய்டு, கீழ்தளத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்று மிரட்டிப் பணியவைத்தனர். அப்படி அடிமையாக இருந்தது திமுகதான், அதிமுக அல்ல.
வேண்டுமென்றே திட்டமிட்டு நம் நிர்வாகி மீது வழக்குப்போடுவது, 2011 கொளத்தூரில் போட்டியிடுகிறார், அதில் முறைகேடு நடந்ததாக அதிமுக வேட்பாளர் வழக்குப்போட்டார், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடக்கிறது, அதைப்பற்றி ஒரு ஊடகமாவது செய்தி வெளியிட்டதா? அது பற்றி கடந்த 4ம் தேதி 2 மணி நேரம் விசாரணை நடந்திருக்கிறது. ஏன் அது பற்றி செய்தியே வெளிவரவில்லை? அந்த வழக்கு மீண்டும் நாளை  மறுதினம் விசாரணைக்கு வருகிறது. 
எப்போதும் ஊடக நண்பர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு செய்தி வெளியிடுகிறார்கள். அதற்காக மிரட்டப்படுகிறார்கள்.  சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை ஊற்றினார்கள், அதுபோல ஊடக நிறுவனத்தின் பொறுப்பாளர், உரிமையாளர் மீதும் சாக்கடை ஊற்றிவிடுவார்கள் என்று பயமோ என்னவோ? 
எங்கள் மீது எவ்வளவு வழக்குப்போட்டீங்க, இப்போது உங்கள் மீதும் வழக்கு வந்துவிட்டது சந்தியுங்கள். திமுகவை உருவாக்கிய அண்ணா கழகம் ஒரு குடும்பம் என்றார், இன்று திமுக கருணாநிதியின் குடும்பமாகிவிட்டது.  கார்ப்பரேட் கம்பனியாகிவிட்டது. 
அடுத்து உதயநிதியை கொண்டுவருவதற்காக உழைத்தவர்கள் எல்லாம் ஓரம்கட்டப்படுகின்றனர். பலமுறை எம்.எல்.ஏ வாக இருந்தவர் துரைமுருகன். அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை, ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவருக்கு மட்டும்தான் ஆட்சியில் பங்கு கிடைக்கும்.
அதிமுக ஜனநாயக இயக்கம். விசுவாசமாக உழைத்தால் உச்சபச்ச பதவிக்கு வரமுடியும். திமுகவில் முடியுமா? இங்கு  கிளைச் செயலாளரே  பொதுச்செயலாளர், முதல்வர் ஆகலாம். வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி இல்லை. ஏழைகளுக்கும் உழைப்பவர்களுக்கும் இடம் உண்டு, எம்.எல்.ஏ ஆவார்கள். கள்ளக்குறிச்சி, பவானிசாகர் எம்.எல்.ஏக்கள் சாதாரண குடும்பத்தினர். அப்படிப்பட்டவர்களை நிறுத்தி வெல்ல வைத்து அழகுபார்க்கும் கட்சி அதிமுக.
அடுத்தாண்டு தேர்தலில் இங்கே வந்திருக்கும் பல நிர்வாகிகள் வேட்பாளர்களாக வாய்ப்புண்டு, விசுவாசமாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எத்தனை நூற்றாண்டு வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்று அம்மா சூளுரைத்தார், அதை நனவாக்கும் விதமாக தேனீக்கள், எறும்பை போல சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். நமக்கு விழக்கூடிய வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் வகையில் தேர்தல் நேரத்தில் மக்களை அழைத்து வந்து ஓட்டு போடச் செய்யுங்கள். நம் வேட்பாளர்கள், கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 
அம்மா இருக்கும்போது ஏழை எளிய மக்களுக்கு தை பண்டிகையின்போது பொங்கல் தொகுப்பு கொடுத்தார். அந்த வழியில் அம்மா அரசு பொங்கல் அன்று 2000 ரூபாய் கொடுத்தோம். அப்போது ஸ்டாலின் 5000 ரூபாய் கொடுக்கலாம் என்றார். இப்போது ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் அவர்களே… தைத்திருநாள் அன்று ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் வழங்குங்கள். எவ்வளவு ஊழல் செய்துவிட்டீர்கள், கடைசி காலத்திலாவது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக கொடுங்கள். இதையாவது ஏழைகளுக்குச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறோம்.
 நாம் முன்கூட்டியே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டோம்.  175 தொகுதிகளில் மக்களை சந்தித்தோம், இனி எந்தக் கட்சியும் இவ்வளவு தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்ய முடியாது. இதற்காக அத்தனை நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் கவலைப்படாதீர்கள், அதிமுகவைப் பொறுத்தவரை சொந்த பலம் வாய்ந்த கட்சி. ஆனால்,  திமுக மக்கள் பலம் இழந்த கட்சி. அதனால்தான் இவர் கட்சியை நம்பி நிற்கவில்லை, கூட்டணியை நம்பி நிற்கிறார். வழக்கம்மாக எல்லா தேர்தலிலும் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புதான் கூட்டணி அமைப்போம். அதேபோல் இப்போதும் அமைக்கபப்டும், பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும்.

Advertisment