சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற விழா நேற்று (25.09.2025) நடைபெற்றது. இதில் அரசுப்பள்ளியில் பயின்று சாதித்த மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரேமா என்ற மாணவி பேசுகையில், ''நான் ஹோட்டலில் படித்தேன். அங்கு மழை வந்தாலும் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் எங்கள் வீடு மழை வந்தால் ஒழுகும். நான் ஹாஸ்டலில் இருந்தாலும் மழை வரும் நேரத்தில் அம்மா, அப்பா எப்படி இருக்கிறார்களோ என எண்ணிக் கொண்டே இருப்பேன். என அம்மா அப்பாவிற்கு நல்ல வீடு கட்டித்தர வேண்டும் என்பது என் கனவு' என உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில் மாணவி பிரேமாவுக்கு வீடு ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்! உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்' என்றார்.