கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் மருந்தில்லையா? மருத்துவர்கள் இல்லையா? என 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை அதிமுகவின் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''மக்கள் வரிப்பணத்தில் உங்களுடைய பெயரில் திட்டத்தை வைப்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. அதை நாங்கள் எதிர்க்கிறோம். எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. 'நலம் காக்கும் ஸ்டாலின்' எனச் சொல்லிவிட்டு வாய் கிழியப் பேசிவிட்டு வட சென்னையில் போய் பாருங்கள். எல்லா இடங்களிலும் குப்பை எடுக்கவில்லை. குப்பை மேடாகக் குவிந்து கிடக்கிறது. அதை எடுப்பதற்கு வக்கில்லை நலம் காக்கும் ஸ்டாலினாம்.

நான் கேட்கிறேன் பிரைமரி ஹெல்த் சென்டர், மாவட்ட மருத்துவமனைகள் என இவையெல்லாம் நான்கரை வருஷமாக ஒன்றுமே இல்லையா? மருந்தில்லையா? மாத்திரையில்லையா? மருத்துவர் இல்லையா? இப்பொழுது தேர்தல் வருகிறதல்லவா அதனால் தான் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தான் மருந்து வருகிறது; மாத்திரை வருகிறது; டாக்டர் வருகிறார்கள்; நர்ஸ் வருகிறார்கள்; அதன் பிறகு எல்லாமே வருகிறது. அப்பொழுது நான்கு வருடமாக ஒன்றுமே இல்லையா?

இப்பொழுது  தேர்தல் வருவதால் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் நலத்தைக் கொடுக்கப் போகிறீர்களா? அப்போ 4 வருடமாக நீங்கள் ஃபெயிலியர் என்பதுதான் அர்த்தம். அதைத்தானே இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் உணர்த்துகிறீர்கள். அது தான் உண்மையும் கூட. தேர்தல் வருவதால் அவருக்கு யோசனை சொல்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அதனால் புதுப்புது யோசனைகள் எல்லாம் சொல்வார்கள். அது ஒருபோதும் எடுபடாது. மக்கள் அந்த அளவிற்கு நம்பிவிடுபவர்கள் கிடையாது.

Advertisment

'கேட்பவர்கள் கேட்டால் கேப்பையில் நெய் வரும்' என்பதைப் போல நீங்கள் சொல்வதை  எல்லாம் நம்புபவர்கள் மக்கள் கிடையாது. இன்னும் ஆறு மாதம்  உள்ளது தேர்தலுக்கு. திரும்ப ரீவீட் அடிப்பதற்கு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக ஒரு திருப்புமுனை ஏற்படும் மீண்டும். அதிமுக ஆட்சி ஏற்படும். எங்களுடைய மக்கள் பணியில் எப்பொழுதும் நாங்கள் தொய்வு வைப்பது கிடையாது.

மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால் ஆளும் அரசை எதிர்த்து அதற்கான எல்லாப் போராட்டங்களையும் மாவட்டங்களில் தாலுகா அளவில், வட்ட அளவில் அதிமுக சார்பாக நடத்தி இருக்கிறோம். தொழிற்சங்கம் சார்பாகவும் போராட்டம் நடத்துகிறோம். உள்ளங்கை நெல்லிக்கனி போல எல்லோரும் இருக்கும் பொழுது முழு பூசணிக்காய் சோற்றில் மறப்பதை போல் அதிமுக போராட்டக்களத்தில் இருப்பதையே மறைத்துப் பேசுகிறார்கள்''என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் 'பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஓபிஎஸ்க்கு தற்போது ஏற்பட்ட நிலைமை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என சொல்கிறார்களே' என்ற கேள்விக்கு, ''பாஜக-அதிமுக கூட்டணி குறித்து எந்த கேள்வியையும் நீங்கள் எடப்பாடி பழனிசாமி இடம் நீங்கள் கேட்கலாம்'' என்றார்.