No medical waste treatment plant that pollutes land, water, and air! - Gram Sabha resolution Photograph: (pudukottai)
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கந்தர்வக்கோட்டைக்கு அருகில் உள்ள பிசானத்தூர் கிராமத்தில் 1.55 ஏக்கர் பரப்பளவில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க தனியார் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த ஆலை தொடங்கியதும் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து அழிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலை பிசானத்தூர் கிராமத்தில் அமைந்தாலும் பல கிராமங்களைப் பாதிக்கும், நிலம், நீர், காற்று மாசு ஏற்பட்டு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த திட்டத்தை இங்கே செயல்படுத்தக் கூடாது என்று பிசானத்தூர் சுற்றியுள்ள கிராமத்தினரும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் ஆலைக்கு எதிராக மக்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரையும் மக்கள் விரும்பாத திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என்றார்.
இந்நிலையில் இன்று பிசானத்தூர் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் நிலம், நீர், காற்றில் மாசு ஏற்படுத்தி மக்களையும், விவசாயம், குடிநீர், கால்நடைகளையும் பாதிக்கும் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று கிராமசபை பார்வையாளராக வந்த அதிகாரிகள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிராம சபையில் கிராம மக்களின் அத்தியாவசிய தீர்மானத்தை நிறைவேற்றாமல் வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அதன் பிறகு பிசானத்தூர் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றிய பிறகு கிராம மக்கள் தீர்மான நோட்டில் கையெழுத்திட்டனர்.