புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, தோழர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் செங்கோடன் தலைமையில், ஒன்றியச் செயலாளர் தமிழ்மாறன் முன்னிலையில் நடந்தது.

Advertisment

கூட்டத்தில் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேசும் போது, ''கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.எஸ், சுயமரியாதை இயக்கம் ஆகியவை இந்தியாவில் 100 ஆண்டு இயக்கம். ஆர்.எஸ்.எஸ் எதுவும் செய்யல ஆனால் சுயமரியாதை இயக்கம் செய்தது ஏராளம். பெரியார் செய்தார் அவரின் கொள்கையில் பொருள் இருக்கிறது. பா.ஜ.க வை வீழ்த்த துடிக்கிறோம். காரணம் மக்களை ஒடுக்க நினைக்கும், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க சிந்தனையை எதிர்க்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அதன் தலைவர்களை மதிக்கிறோம்.

Advertisment

100 ஆண்டுகளில் 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் கம்யூனிஸ்ட். எந்தக் கட்சியையும் தாழ்த்தி சொல்லவில்லை. 100 ஆண்டுகளில் நாங்கள் சாதித்தது என்ன என்கிறார்கள்? எத்தனை சதி வழக்குகளை சந்தித்தோம். நாங்கள் அழிந்திருக்க வேண்டும். ஆனால் அழியவில்லை நிலைத்திருக்கிறோம்.

நாங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறோம். வெற்றி பெற முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு கிராமத்தில் நாங்கள் இல்லாத கிராமம் உண்டா? அதிகமான சொத்து எங்களிடம் உள்ளது என்கிறார்கள். ஆம் கட்சி கட்டடங்கள் உள்ளது. தமிழ்நாட்டில் 2 சுயேட்சைகளால் ஆளுங்கட்சியாக வேண்டிய நாங்கள் எதிர்கட்சி ஆனோம். டீக்கடை அரசியல் குறைந்துவிட்டது. மீண்டும் டீ கடை அரசியல் பேச வேண்டும் திமுக - அதிமுக அரசியல் பேச வேண்டும். பாஜக - கம்யூனிஸ்ட் அரசியல் பேச வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான அரசியல் கிடைக்கும்.

Advertisment

சட்டமன்றம், நாடாளுமன்றம் கடந்து நாட்டை செதுக்குவது டீக்கடை அரசியல் தான். தி.மு.க விடம் கம்யூனிஸ்ட்  ரூ.15 கோடி வாங்கியதே என்று கேட்டார்கள் ஆம் வாங்கினோம். தேர்தல் செலவு செய்தோம். ஆனால் பாஜக தேர்தல் பத்திரங்கள் வாங்கியது எவ்வளவு? 100 ஆண்டுகளில் ஊழலுக்காக ஒரு கம்யூனிஸ்ட் கூட கைதானதில்லை. தேர்தல் செலவுகளை அரசியல் கட்சிகள் செய்யக் கூடாது அரசே ஏற்க வேண்டும்.  நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் இருக்கிறோம்?

மாநில உரிமையில் ஏற்படும் தடைகளை உடைக்க கொள்கையுடன் ஆதரிக்கிறோம். முதல்வர் பீகார் செல்கிறார் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் மோடி தமிழ்நாட்டில் வடவர்களை திமுக தாக்குகிறது என்கிறார். வடவர்களை திமுக தாக்குகிறது என்பது சரியா எடப்பாடியும் அதிமுக சகோதரர்களும் பதில் சொல்லுங்கள்.

சிறிய கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் அச்சப்படுவோம். ஆனால் பாஜக வுடன் கூட்டணி என்பதால் அச்சமில்லை. நீங்கள் எதைச் சொல்லி வாக்கு கேட்பீர்கள். எங்கள் கூட்டணி வலுவானது. முதல்வரின் நலத்திட்டங்கள் வலுவானது. மக்கள் ஏற்கிறார்கள் எங்கள் கூட்டணியை. இது தமிழ் மண் பீகார் அல்ல என்பதை பாஜக வுக்கு சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் நீதி சாய்ந்தது. ஆனால் முதல்வர் சாயவில்லை. ஆலய வழிபாட்டுக்கு தடையானவர்களா தமிழர்கள்? அ.தி.மு.க வினர் சொல்லுங்கள். எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் வாய்ப்பில்லை. காந்தி பெயரை நீக்கி மாநில அரசிடம் சுமையை புகுத்துகிறீர்கள். கிராம திட்டம் என்றால் காந்தி தான். அவர்மீது வெறுப்பு உங்களுக்கு அதனால் நீக்குகிறீர்கள்.

அமித்ஷா மோடி வருகிறார்களாம் வரட்டும் வந்துவிட்டு போகட்டும். ஆனால் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும். விஜய் திமுக வை தீய சக்தி என்கிறார். ஆமா தவெக.. கொள்கை என்ன திமுக சாதி, மதக்கலவரம் தூண்டியதுண்டா? எப்படி சொல்கிறீர்கள். நாங்கள் முரண்பட்டவர்கள் தான் ஆனால் தீய சக்தி என்று சொன்னதில்லை. அ.தி.மு.க - தி.மு.க ஜனநாயக சக்திகள்'' என்றார்.