'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 155 க்கு மேற்பட்ட தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. அதேநேரம் டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அதிமுகவில் பேசு பொருளாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும். அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வருகின்றனர். எனவே பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
அதிமுக எத்தனை கோஷ்டிகளாக பிரிந்தாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான். மோடியா லேடியா என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக இயக்கம் இன்றைக்கு ‘அண்ணன் அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத் தான் இந்த டெல்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன' என தெரிவித்துள்ளார்.